ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து, சென்ற செப்டம்பரிலும், ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த பிரிவில் இயங்கும், பாரதி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இந்த இழப்பைச் சென்ற மாதமும் சந்தித்துள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 50 லட்சம் வாடிக்கையாளர் வரை இழந்தனர். செப்டம்பரில் மேலும் 22 லட்சம் சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர்.
இதிலிருந்து இந்தியாவில், ஜி.எஸ்.எம். பிரிவில் மொபைல் தொடர்பு அதிக பட்ச உச்ச கட்டத்தினை எட்டிவிட்டது தெரியவந்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் இதுவரை வைத்திருந்து பயன்படுத்திய இரண்டாவது மற்றும் மூன்றாவது சிம் தொடர்பினைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
சென்ற ஜூன் மாதத்தில் இந்த மூன்று பெரிய நிறுவனங்களும் 31.6 லட்சம் புதிய சந்தாதாரர்களையும், ஜூலை மாதத்தில் 44.2 லட்சம் பேரையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம், தங்கள் நிறுவன சிம் போன்களைத் தொடர்ந்து 60 நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், இணைப்பைத் துண்டித்தது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மொத்தமாகக் குறைந்ததற்கு இது போன்ற நடவடிக்கைகளும் காரணமாயிருந்தது. பல நிறுவனங்கள், தாங்கள் வழங்கி வந்த சலுகைகளைக் குறைத்ததுடன், இலவசங்களையும் நீக்கிவிட்டன.
1 comments :
தகவலுக்கு மிக்க நன்றி...
Post a Comment