தொடர்ந்து பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள் மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வகையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரு சிம் போன்களைச் சந்தைப்படுத்துவதில் முதலில் உள்ளது. அண்மையில் இந்நிறுவனத்தின் இரண்டு டூயல் சிம் போன்கள் பலரைக் கவர்ந்துள்ளன. அவற்றைக் காணலாம்.
ஸ்பைஸ் எம் 7070:
இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும் தரப்பட்டுள்ளன. மேலும் படம் எடுக்கும் போது கேமரா அசைக்கப்பட்டாலும் படங்களைத் தெளிவாக இதில் எடுக்க முடியும்.
விநாடிக்கு 15 பிரேம்கள் வரை வீடியோ ரெகார்டிங் இதில் மேற்கொள்ள முடியும். வீடியோ பிளே செய்வதும் இதில் எளிதாகவும் நன்றாகவும் உள்ளது. இதன் மெமரியை 16 ஜிபி வரை நீட்டிக்க முடியும். இதில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், ஜாவா தொழில் நுட்பமும்,அ2ஈக இணைந்த வசதி கொண்ட புளுடூத் வசதியும், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயரும் உள்ளன.
ரெகார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 1000 முகவரிகளை இதில் போட்டு வைக்கலாம். இதன் குறியீட்டு விலை ரூ.7,999.
ஸ்பைஸ் மொபைல் டி 1111:
ஒரு ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ. சிம் என இரண்டு சிம்களைப் பயன்படுத்தக் கூடிய மொபைலாக ஸ்பைஸ் மொபைல்ஸ் தந்திருப்பது டூயல் சிம் மொபைல் டி 1111. இந்த போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவது இதன் சிறப்பாகும்.
பொதுவாக இந்தியாவில் டூயல் சிம் வகை போன்கள் விண்டோஸ் மொபைல் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கிடைப்பதில்லை. அந்த வகையில் இந்த போன் தனித்தன்மை கொண்டதாகும். மேலும் இதில் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டு என இரண்டும் இருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது.
இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்பட முடியாத தடுப்பு திரைக்கு தரப் பட்டிருப்பது மட்டுமின்றி, போனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மென்மையான லெதர் பை மற்றும் ஸ்கிரீன் கார்ட் தரப்பட்டுள்ளது.
கீ போர்டு சிறியதாகத் தோற்றமளித்தாலும், பயன்படுத்த வசதியாக கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகத் தடிமனாகத் தோற்றமளித்தாலும் இதன் எடை குறைவாகவே உள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் மொபைல் பதிப்பு 6. இதன் வசதிகள் அனைத்தும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எழுத்துக்களைச் சற்றுப் பெரிதாக்கி தொட்டுப் பயன்படுத்தலாம்.
கீ பேட் பெரிதாக இருந்தாலும் டிக்ஷனரி மோட் வகையில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற இயலவில்லை. இந்த வகை கீ பேடிற்கு பழக்கமில்லாதவர்களுக்கு இது சற்று சிரமம். இதன் விண்டோஸ் மீடியா பிளேயர் கூடுதல் வசதிகளுடன் தரப்படவில்லை என்பதால் ஆடியோவின் தன்மையை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 3ஜிபி மற்றும் எம்பி4 வீடியோ இயக்கம் சிறப்பாக உள்ளது.
நெட் தொடர்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வாப் தரப்பட்டுள்ளன. பிரவுசர்களாக பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு மற்றும் ஆப்பரா மினி தரப்பட்டுள்ளது. ஆப்பரா மினி வேகமாக இயங்குவதால் அதனையே பயன்படுத்தலாம்.
0 comments :
Post a Comment