நாணயம் - சினிமா விமர்சனம்

சென்னையில் பெரிய வங்கி நடத்துபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பாங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக வேலைக்கு சேருகிறார் பிரசன்னா. கொள்ளையர்கள் புக முடியாத பாதுகாப்பான வங்கி ஒன்றை உருவாக்குவது பிரசன்னா குறிக்கோள்.

ரொக்கப் பணம், நகைகள், தஸ்தாவேஜுகள், இரும்பு அறைக்குள் வைக்கப்பட்டு அதை பூமிக்கு அடியில் தண்ணீருக்குள் மறைத்து வைக்கும் நவீன தொழில் நுட்பத்தில் லாக்கரை வடிவமைக்கிறார். பாங்கி குழு அதை ஏற்கிறது. பிரசன்னா மேல் நம்பிக்கை வைத்து எஸ்.பி.பி. அப்பாங்கியை கட்டுகிறார்.

அங்குள்ள பணத்தை கொள்ளையிட சிபிராஜ் கோஷ்டி திட்டமிடுகிறது. இவர் எஸ்.பி.பி.யால் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜெயிலுக்கு போன பழைய வேலைக்காரர். கொள்ளையடிக்க பிரசன்னாவை பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.

விவாகரத்தான ராகிணியை பிரசன்னா விரும்புகிறார். முதல் கணவரை கொன்று பழியை பிரசன்னா மேல் போடுகின்றனர். தப்பவழியின்றி கொள்ளை கும்பலிடம் மாட்டுகிறார். பிரசன்னா உதவியுடன் கொள்ளை திட்டத்தை வகுக்கின்றனர். திட்டமிட்டபடி பூமிக்குள் துளை போட்டு பாங்கிக்குள்ளும் நுழைகிறார்கள். வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா என்பது கிளைமாக்ஸ்.

பாங்கியில் கடன் வாங்கி சொந்த தொழில் துவங்கும் லட்சிய இளைஞன் வேடத்தில் ஜொலிக்கிறார் பிரசன்னா. கனவு பாங்கியை உருவாக்கி எண்ணங்கள் நிறைவேறும் சந்தோஷத்தில் இருக்கும் அவரை கொள்ளை கும்பல் சுற்றி வளைப்பது எதிர்பாராதது.

விவாகரத்தான ராகிணியுடன் திடீர் காதல் கல்யாண பேச்சுக்கள் ஒட்டவில்லை.

தன்னால் பாதுகாப்பாக கட்டிய பாங்கியை தன்னை வைத்தே கொள்ளையடிக்க துணியும் கொள்ளையர்களிடம் இருந்து விட பட முடியாமல் தவிக்கையில் பரிதாபம் அள்ளுகிறார். கிளைமாக்சில் அதிரடி நடத்தி ஹீரோயிசத்தை நிமிர வைக்கிறார்.

வில்லன் அந்தஸ்துக்கு மாறியுள்ள சிபிராஜ் ஸ்கோர் பண்ணியுள்ளார் ராகிணி கணவனையும் சக கூட்டாளியையும் கொல்வதில் கொடூரம். நக்கல், நையாண்டியுடன் வில்லன் கெட்டப்பில் “பாஸ்”.

ஆக்ஷன் சீன்களை விறுவிறுப்பாக தொகுத்துள்ளார் இயக்குனர் சக்தி எஸ். ராஜன். பிரசன்னா காதல், கடற்கரை கொலை, கொள்ளையர் ஆஜர், பாங்கி கொள்ளை, சிபியின் பேச்சை அவருக்கு தெரியாமல் ரிக்கார்டு செய்யும் தந்திரம் பிறகு அவரிடமே மாட்டும். அவஸ்தை என சஸ்பென்ஸ் திரில்லரோடு சீன்கள் நகர்வது படத்தோடு ஒன்ற செய்கிறது.

ராகிணியின் முதல் திருமண விஷயத்தில் தெளிவில்லை. வைப்பாட்டிக்காக சொந்த பாங்கியை கொள்ளையடிக்க உடன்படும் எஸ்பி.யின் செயலில் நம்பகத்தன்மை இல்லை. அவரது மறுபக்க வாழ்க்கை எதிர்பாராத அதிர்ச்சி. ராகிணி நல்லவராக வந்து வில்லியாக மிரட்டுகிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு தமனின் பின்னணி இசை பெரிய பக்கபலம். ஜேம்ஸ் வசந்தன் பாடலில் நான் போகிறேன் மேலே பாடல் இனிமை.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes