மொபைல் போன் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தில் இயங்கும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் தன் வர்த்தகத்தில், மொபைல் போன் விற்பனையில் 20 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.
கூகுள் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைந்த தன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்த இலக்கை அடைய கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறது.
ஸ்மார்ட் போன் பிரிவில் ஆப்பிள், ஆர்.ஐ.எம்., பால்ம் மற்றும் சில நிறுவனங்களின் போன்களே முன்னணியில் உள்ளன. இதனை முறியடித்து முன்னணி இடத்தைப் பிடிக்க எல்.ஜி. நடவடிக்கை எடுத்து வருகிறது. வர்த்தக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு உதவிடும் ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை, வழக்கமாக வடிவமைக்கப்படும் போன்கள் மட்டும் போதாது.
அதில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் புரோகிராம்களும் முக்கியமானவை ஆகும். எனவேதான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினையும், அதற்கேற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களையும் எல்.ஜி. செயல்படுத்தி வருகிறது.
2010 ஆம் ஆண்டில் விண்டோஸ் மொபைல் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் தன் மொபைல்களில் பதிந்து எல்.ஜி. தர இருக்கிறது. இந்த ஆண்டு எல்.ஜி. வெளியிட இருக்கும் மொபைல் போன்களில் 20 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 11.7 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்து மொத்த அளவில் 10% இடத்தைப் பிடித்த எல்.ஜி., இந்த ஆண்டு 14 கோடி போன்கள் விற்பனை செய்து தன் பங்கினை உயர்த்தத் திட்டமிடுகிறது
0 comments :
Post a Comment