இணைய வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எதிர்பாராத திசைகளில் வளர்ந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கி வருகிறது. உலகைச் சுருக்கி, மக்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் சக்திகளில் இணையத்திற்குத்தான் முதலிடம் என்று சொன்னால் அது மிகையாகாது.
நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திய இணைய வெளி இன்று உலக மக்கள் அனைவரின் சொத்தாக உயர்ந்துள்ளது. ஒவ்வொருவரும் அதில் தங்களுக்கென ஓர் இடத்தை, உலகை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இன்டர்நெட் வளர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இந்த வளர்ச்சி மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கலாம்.
கூகுள் வேவ்:
இந்த ஆண்டில் கூகுள் வேவ் பயன்பாடு நிச்சயம் அதிகரிக்கும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் இது குறித்த செய்தி வெளியானது. இருப்பினும் அதிக எண்ணிக்கையில் இதில் உறுப்பினர்கள் சேரவில்லை. ஏனென்றால் அறிவிக்கப்பட்ட நிலையிலும், இது தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு வந்தது.
சில வாரங்களுக்கு முன் கூகுள் வேவ் இணையத்தில் இடம் பெற்றது. கூகுளின் வழக்கமான நடைமுறையாக, இந்த தளத்தில் சேர்ந்து செயல்பட, உங்களுக்கு அழைப்பு கிடைக்கப்பெற வேண்டும். இந்த முறை உங்களுக்கு அழைப்பு வேண்டி, நீங்கள் விண்ணப்பிக்கலாம்.https://services. google.com/fb/forms/wavesignup// என்ற தளத்தில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது.
கூகுள் “அலை”தளத்தில் உறுப்பினர்கள் இணைந்து உரையாடலாம்; டாகுமெண்ட்களை உருவாக்கிப் பரிமாறிக் கொள்ளலாம்; அத்துடன் போட்டோ, வீடியோ, மேப் எனப் பல்வேறு தகவல் கோப்புகளை ஒருவருக்கொருவர் கொள்ளலாம். முதலில் நீங்கள் ஓர் அலையை உருவாக்குகிறீர்கள். பின் அதில் உங்களுக்குப் பிடித்த நபர்களை இணைக்கிறீர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் இந்த அலையில் அமைக்கப்படும் பைல்களை எடிட் செய்திடலாம். எந்த காலகட்டத்திலும் ஒரு பைல் எப்படி உருவானது என்று ரீவைண்ட் செய்து பார்க்கலாம். இதுவும் ஆண்ட்ராய்ட், குரோம் போல ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவானது என்பதால், இதில் புரோகிராம் டெவலப் செய்பவர்கள் இதனை மேம்படுத்தலாம்.
இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட நல்ல தளமாகவும் பயன்படும். எனவே இந்த ஆண்டு நிச்சயம் இத்தளம் குறித்து அதிகம் பேசப்படும் அளவிற்கு பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த தகவல்களைப் பெற http://wave.google.com/ என்ற தளத்தில் உங்கள் பெயரைப் பதிந்து வைக்கலாம்.
இணைய வெளி சமுதாய வலைமனைகள் (Social Network) :
2008 ஆம் ஆண்டு தொடங்கிய சோஷியல் நெட்வொர்க் தளங்கள், சென்ற ஆண்டில் மிக வேகமாக வளர்ந்தன. ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யு–ட்யூப் போன்றவை இவற்றைத் தங்களுடன் இணைத்துத் தொடர்பு கொள்ள அனுமதி தந்தன. இந்த வளர்ச்சி வரும் ஆண்டில் இன்னும் பெருகும்.
பணம் சம்பாதித்தல்:
இன்டர்நெட் மூலம் ஏமாற்றி பணம் தேடுவது இன்னும் நடந்து கொண்டு இருந்தாலும், இணைய தளங்களில் விளம்பரம் மற்றும் பிற நாணயமான வழிகள் மூலம் பணம் ஈட்டுவது தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இதற்கு வழி தருகின்றன. விளம்பரங்களில் ஒவ்வொரு கிளிக் ஏற்படுவதற்கும் பணம் என்ற வகையில் இவ்வகை வர்த்தகம் பெருகி வருகிறது. இது இந்த ஆண்டில் அதிகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.
இன்டர்நெட் டிவி:
சென்ற ஆண்டில் அவ்வளவாக எடுபடாத இன்டர்நெட் டிவி, 2010ல் நிச்சயம் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவிற்கு வளரும். 2006ல் கூகுள் யு–ட்யூப் தொடங்கியபின், வீடியோ பகிர்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிவேக இன்டர்நெட் இணைப்பு, அதிக திறனுடன் இயங்கும் ஸ்ட்ரீமிங் வீடியோ, நல்ல தரமான படங்கள், தனிப் பொருள் குறித்த விளம்பரப் படங்கள் என இந்த பிரிவில் பலமுனை விரிவாக்கம் இந்த ஆண்டில் நிச்சயம் ஏற்படும். யு–ட்யூப் இதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கலாம்
0 comments :
Post a Comment