ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மொபைல் கோபுரங்களுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில், புதிய தகவல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம் வழங்கிய அறிவுரையைப் பின்பற்றி இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
மின்காந்த அலைகள் இயற்கைச் சூழ்நிலையில் உயிர்வாழும் தாவரங்களுக்கும் தீங்கு இழைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சுற்றுப்புறச் சூழ்நிலை அமைச்சகம், ஓர் ஆய்வுக்குப் பின் தெரிவித்துள்ளது.
எனவே, கூடுமானவரை கூடுதல் கோபுரங்களை அருகருகே அமைப்பதனைத் தடுக்குமாறு தொலைதொடர்புத் துறையினைக் கேட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மின் காந்த அலைகளால், இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை ஆய்வு செய்திட குழு ஒன்றை அமைத்தது. சிட்டுக் குருவிகள் மட்டுமின்றி, தேனீக்களும் மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
வேளாண்மைப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு கணிசமானது மட்டுமின்றி, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையிலும், இந்த தேனீக்கள் உதவுகின்றன. எனவே தேனீக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அது இயற்கைச் சூழல் கட்டமைப்பினையே பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பறவைகளின் வழக்கமான பறக்கும் வழிகளில் புதிய கோபுரங்கள் அமைக்கப்படக் கூடாது.
அலைகள் பரவுவது, புதிய கோபுரங்களினால், குறிப்பிட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருக்கக் கூடாது.
விலங்குகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் மொபைல் கோபுரங்களை அமைக்கையில், காடுகளுக்கான அமைச்சகத்தினையும், துறையையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் தகவல் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், மொபைல் கோபுரங்களில் ஏற்படும் மின் காந்த அலைகள், மனிதர்களின் நலத்தைப் பாதிக்கின்றனவா என்பதற்கு இதுவரை சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது.
1 comments :
இப்போதோதாவது முடிவு எடுத்தார்களே...
குருவி உட்பட பல பறவைகளைப் பார்த்து ரொம்ப நாளாச்சி...
தகவலுக்கு நன்றி...
Post a Comment