இந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் பாதுகாப்பு வளையத்துடன் கூடிய மூன்று ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்டெல்லார், க்ரேஸ் மற்றும் ஹொரைஸான் (Stellar,Craze,Horizon) எனப் பெயரிட்டுள்ள இவற்றின் விலை ரூ. 6,499 முதல் ரூ. 11,999 வரை உள்ளது.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவற்றின் பாதுகாப்பினை, ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி என்.க்யூ மொபைல் நிறுவனம் தருகிறது.
வைரஸ் தாக்கம், தகவல் இழப்பு மற்றும் திருடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் இவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் பார்க்கையில் ஏற்படும் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த வகை பாதுகாப்பு மொபைல் போன் விற்பனையில் ஒரு புதிய பரிமாணமாகும். இதுவரை மொபைல் போன் பயன்படுத்துவோர், இதற்கென உள்ள பாதுகாப்பு தரும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
போன் தயாரிப்பாளர்களே இந்த பாதுகாப்பினை வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் தன் விற்பனை ஆண்டுக்கு 60 லட்சம் என்பதிலிருந்து 70 லட்சம் என உயரும் என்று எதிர்பார்க்கிறது. மூன்று போன்களின் அம்சங்கள்:
1. ஸ்பைஸ் ஸ்டெல்லார்:
டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், இதனை அப்டேட் செய்திடும் வசதி, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ப்ராசசர், 245 மெகா ஹெர்ட்ஸ் வேக கிராபிக்ஸ் ப்ராசசர், 512 எம்பி ராம் மெமரி, 4 அங்குல டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கான தனி கேமரா, 7 மணி நேரம் தொடர்ந்து பேசிட மின்சக்தி வழங்கும் 2000 mAh திறனுடன் பேட்டரி, 3ஜி, புளுடூத் மற்றும் வைபி இணைப்பு ஆகியவை இதில் உள்ளன. அதிக பட்ச விலை ரூ. 9,999.
2.ஸ்டெல்லார் ஹொரைஸான்:
டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 4.0. சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், 300 மெகா ஹெர்ட்ஸ் கிராபிக்ஸ், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி பதியப்பட்ட நினைவகம், 5 அங்குல டச் ஸ்கிரீன், 5 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ அழைப்பிற்கு முன்புற கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய திறனுடன் 4 ஜிபி உள் நினைவகம், 2250 mAh திறனுடன் பேட்டரி, ஜி.பி.எஸ்., வைபி மற்றும் புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999.
3. ஸ்பைஸ் ஸ்டெல்லார் கிரேஸ் எம்.ஐ.355:
டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம்,இதனை அப்டேட் செய்திடும் வசதி, 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 3.5 அங்குல டச் ஸ்கிரீன், 1420 mAh திறனுடன் பேட்டரி, புளுடூத், வைபி, ஜி.பி.எஸ். ஆகியவை இந்த மொபைல் போனில் தரப்படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,499.
இந்த மூன்று போன்களுடன் ஓராண்டுக்கு, மாதந்தோறும் 100 எம்பி டேட்டா டவுண்லோட் செய்திடும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.
1 comments :
பல தகவல்கள் அறிய முடிந்தது... நன்றி...
Post a Comment