மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா, வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகும்போதே, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.
திங்க்பேட் (Thinkpad) லேப்டாப் கம்ப்யூட்டர்களை வெளியிட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழா ஒன்றில், லெனோவா இதனை அறிவித்துள்ளது.
வெளியிடப்பட இருக்கும் டேப்ளட் பிசி Thinkpad Tablet 2 என அழைக்கப்படும். இன்டெல் சிப்புடன், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்கும். தற்போது திங்க்பேட் டேப்ளட் பிசிக்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பதிந்து தரப்படுகிறது.
விண்டோஸ் சிஸ்டத்துடன் டேப்ளட் பிசிக்களைப் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப் பினை, லெனோவா வெளியிட்டுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் “Clover Trail” ப்ராசசர், 1,366 x 768 ஐ.பி.எஸ். பேனல் டிஸ்பிளே, 10 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, தேவைகளின் அடிப்படையில் 3ஜி அல்லது 4ஜி, மைக்ரோ எச்.டி.எம்.ஐ. அவுட்புட், யு.எஸ்.பி. போர்ட், 2 எம்பி திறனுடன் முன் பக்க கேமராவும், 8 எம்பி திறனுடன் பின்பக்க கேமரா,விருப்பப்பட்டால் என்.எப்.சி., மற்றும் கைரேகை ரீடர் ஆகியவை இதில் தரப்படுகின்றன. இதன் ஓரத்தில் செருகி வைத்துப் பயன்படுத்த ஸ்டைலஸ் ஒன்றும் கிடைக்கிறது.
இதன் எடை 1 பவுண்டுக்கும் சற்று அதிகமாக உள்ளது. தடிமன் 9.4 மிமீ. விருப்பப்பட்டால், இதனுடன் கீ போர்ட், மூன்று யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் ஈதர்நெட் ஜாக் கொண்ட ஹப் தனியே தரப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தன்னுடைய சர்பேஸ் ப்ரோ டேப்ளட் பிசியை விற்பனைக்குக் கொண்டு வருகையில், மேலே சொல்லப்பட்ட லெனோவா டேப்ளட் பிசி போட்டியாக இருக்கும். இவற்றின் விலை இனிமேல் தான் தெரிய வரும்.
2 comments :
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
அழகாக உள்ளது ... விலை என்ன இருக்குமோ ??
Post a Comment