சாப்ட்வேர் கம்பெனிகளின் காலாண்டு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள், வியாழனன்று மேலே சென்று முடிந்தன. வங்கிப் பங்குகள் எப்போதும் முதலீடு செய்வதற்கு ஏற்றவை என்பதை, சந்தைகள் மறுபடி நிரூபித்தன.
சாப்ட்வேர் பங்குகளுடன் சேர்ந்து, வங்கிப் பங்குகளும் சந்தையை மேலே கொண்டு செல்ல உதவின. வியாழனன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 164 புள்ளிகள் கூடி, 17,692 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 41 புள்ளிகள் கூடி, 5,290
புள்ளிகளுடனும் முடிந்தன. கடந்த எட்டு வாரங்களாக சந்தை, லாபங்களையே பார்த்து வந்திருக்கிறது.
மியூச்சுவல் பண்டு முதலீடுகளின் மதிப்பு : ஆண்டின் கடைசி என்பதால், பலரும் தங்களது மியூச்சுவல் பண்டுகளை விற்று லாபங்களை கண்ணில் பார்ப்பது நடப்பது தான். அது மியூச்சுவல் பண்டுகள் முதலீடுகளின் மதிப்பை, மார்ச் இறுதியில் 5 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது பிப்ரவரியில் ஏழு லட்சத்து 81 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக இருந்த மதிப்பு, மார்ச் இறுதியில் ஏழு லட்சத்து 43 ஆயிரத்து 950 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மொபைல் மார்க்கெட் : மொபைல் போன் வாங்குபவர்கள் கூடி வருவதால், மொபைல் தயாரிப்பவர்களும் கூடி வருகின்றனர். இவ்வளவு வியாபாரம் நடந்தும், மொபைல் நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியவில்லை. காரணம், மொபைல் நிறுவனங்களின் போட்டியால், அவர்களின், 'மார்ஜின்'கள் குறைகின்றன. எனவே, இந்நிறுவனங்களின் பங்குகள், 'தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே' உள்ளன.
கூடிவரும் ஏற்றுமதி : கடந்த ஆண்டு பிப்ரவரியை விட, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்றுமதி, 35 சதவீதம் கூடியுள்ளது. இது, அபரிமிதமான வளர்ச்சி.
இரண்டு மடங்கு பார்த்தீர்களா? : கடந்த 2009 ஏப்ரல் முதல் 2010 மார்ச் வரை சரியான முறையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தீர்களேயானால், உங்கள் முதலீடு இரு மடங்காக ஆகியிருக்கும். சந்தை இதே சமயத்தில் 81 சதவீதம் கூடியுள்ளது. சாப்ட்வேர், ஸ்டீல், மோட்டார் கார் கம்பெனி, வங்கிகளின் பங்குகள், கடந்த ஆண்டில் மேலே சென்றுள்ளன. அதே சமயம் டெலிகாம் பங்குகள் முன்னேற்றமே இல்லாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
ஸ்டீல் விலை உயர்கிறது : சொல்லாமல் கொள்ளாமல் உயர்ந்து வருகிறது ஸ்டீல் விலை. கடந்த ஆறு மாதத்தில் நான்கு முறை விலையேற்றம். இது வீடு, கார் மற்றும் ஸ்டீல் சார்ந்த பொருட்களின், விலைகளை ஏற்றும். பொருளாதாரம் முன்னேறி வருவதால் வீடுகளின் விலை முன்னமேயே மிகவும் ஏறிவருகிறது.
கூடிவரும் ஸ்டீல் விலை, இன்னும் வீடுகளின் விலையை கூட்டும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : அடுத்த வாரம் மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். சந்தையில் காலாண்டு முடிவுகள் வெளிவரத் துவங்கும் நாட்களாகும். சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் உண்டு.
0 comments :
Post a Comment