சென்சஸ்-2011...: வரலாறும், பயனும்

இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்கள் குறித்த புள்ளி விவரங்களை பட்டியலாக தருவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது.


ஆங்கிலேயர் ஆட்சியில், கடந்த 1872ம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது.


இந்தியாவில் எடுக்கப்பட்ட சில மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், பல்வேறு அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டதும் உண்டு. முதல் முதலில் கடந்த 1861ம் ஆண்டு எடுக்கப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் சுதந்திர போர் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.


பின், 1921 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட இருந்த கணக்கெடுப்பு ஒத்துழையாமை இயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. கடந்த 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போர் காரணமாக நிறுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னும் கூட 1981ம் ஆண்டு அசாமிலும், 1991ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரிலும் சில அரசியல் காரணங்களுக்காக கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது.


2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. மற்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பு போல அல்லாமல் இம்முறை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும், இந்த கணக்கெடுப்பு பணியின் போது எடுக்கப்பட உள்ளன.


இதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக தேவைப்படும் அடையாள அட்டைகள் தயாரிக்க முடியும்.பிறப்பு, இறப்பு, நோய், பொருளியல், மக்கள் தொடர்பான விவரங்கள், மக்களின் சமுதாய வாழ்க்கை, புள்ளி விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பால், இந்தியாவின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், சென்சஸ் கமிஷனர் மற்றும் ரிஜிஸ்திரார் ஜெனரல் அலுவலகம் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் பணியாகும். கடந்த 1948ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் இயற்றப் பட்டது. சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக கடந்த 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


பின் 1969ம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டப்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டமும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது.


இதையடுத்து, 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 31 லட்சம் மக்களிடம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes