ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின் இயங்காததே இத்திட்டத்தின் தோல்விக்கான காரணம்' என, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.


கடந்த 15ம் தேதி, ஜி-சாட் 4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் திட்டம், வெற்றி அடையவில்லை. இதற்கான காரணம் பற்றி, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.


இதன் முடிவாக, ''கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அது ஏன் இயங்கவில்லை என்பது தான் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது,'' என்கிறார், 'இஸ்ரோ'வின் செய்தித் தொடர்பாளர் சதீஷ்.ராக்கெட் ஏவப்பட்டது தொடர்பான அத்தனை விவரங்களும், மறுநாளே கையில் கிடைத்துவிட்டன.


'இஸ்ரோ'வின் மூத்த விஞ்ஞானிகள், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு, அவற்றை வரிக்கு வரி படித்துக் கொண்டிருக்கின்றனர்.ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், மூன்று நிலைகளைக் கொண்டது.


மூன்றாவது நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின், முதல் முறையாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின், மைனஸ் 253 டிகிரி செல்சியசில் உள்ள ஹைட்ரஜன் திரவத்தையும், மைனஸ் 183 டிகிரி செல்சியசில் உள்ள ஆக்சிஜன் திரவத்தையும் எரிபொருளாகக் கொண்டது.


திட்டமிட்டபடி, 15ம் தேதி மாலை 4.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. அதன் இரண்டாம் நிலை முடியும் வரை, அதாவது 293வது வினாடி வரை, எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது.ஆனால், மூன்றாம் நிலையில், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கத் துவங்கியிருக்க வேண்டிய 304வது வினாடியில், பிரச்னை உருவானது; ராக்கெட் கடலில் விழுந்தது.


இதுதொடர்பாக, 'இஸ்ரோ'வின் முன்னாள் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறும்போது,''


இரண்டாவது நிலையின் இறுதி வரை எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்பதும், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்ட விஷயங்கள். அதன் பிறகு, ராக்கெட்டின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை; சரியவும் துவங்கிவிட்டது,'' என்றார்.


கிரையோஜெனிக் இன்ஜின் ஏன் இயங்கவில்லை என்பது பற்றி, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஜி.எஸ்.எல்.வி., டி 3யில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால், ஏகப்பட்ட முறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.


போதாதக்குறைக்கு, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர்கள், கிரையோஜெனிக் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய தேசியக் குழு ஒன்றும், இந்த ராக்கெட்டை பல முறை ஆய்வு செய்து, 'தாராளமாக ஏவலாம்' என, பச்சைக்கொடி காட்டியிருந்தது.


அதுமட்டுல்ல, அந்த கிரையோஜெனிக் இன்ஜின், அடுத்தடுத்து 7,767 வினாடிகளுக்கு தரையில் பரிசோதிக்கப்பட்டது. இத்தனைக்கும், வானத்தில் அது 720 வினாடிகள் தான் இயங்க வேண்டியிருந்தது.


'இஸ்ரோ' தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டது போல, இன்ஜின் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிரையோஜெனிக் இயந்திரமும் 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியே தகுதிச் சோதனையில் முழு வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், வான்வெளியின் வெற்றிடத்தில் (வேக்குவம்) கிரையோஜெனிக் இன்ஜின் இயங்க வேண்டியிருந்தது தான் மிகப் பெரிய சிக்கல்.


ஏனெனில், தரையில் அதுபோன்ற வெற்றிடத்தை செயற்கையாக உருவாக்கி சோதித்துப் பார்க்க முடியாது.அதனால் என்ன? விண்வெளி விஞ்ஞானத்தில் எத்தனையோ வெற்றிடத்தை நிரப்பி, வெற்றி கண்டவர்கள் நம் விஞ்ஞானிகள்; இதிலும் அவர்கள் வெற்றி காண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes