இந்தியாவைப் பழிவாங்குவேன்' என, அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தன் நண்பனுக்கு அனுப்பியுள்ள இ - மெயிலில் தெரிவித்துள்ளான். இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கனை, அந்நாட்டு பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் சமீபத்தில் கைது செய்தனர்.
அவனுடன் அவனது பள்ளிக்கால நண்பன் தகாவுர் உசேன் ரகுமான் என்பவனையும் கைது செய்தனர். இவன் பாகிஸ்தானில் பிறந்தவன். தற்போது கனடா குடியுரிமை பெற்றவன். இந்நிலையில், தனது பள்ளிப் பருவ தோழன் ஒருவனுக்கு கடந்த பிப்ரவரியில் டேவிட் ஹெட்லி இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளான். அதில் கூறியுள்ளதாவது:
பயங்கரவாதம் கோழைகளின் ஆயுதம் என, சிலர் சொல்கின்றனர். நான் சொல்கிறேன், "பயங்கரவாதத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான அல்லது முறைகேடான அல்லது கொடூரமான செயல்' என, நீங்கள் அழைக்கலாம். பயங்கரவாதம் ஒரு போதும் கோழைத்தனமான செயலாகாது. முஸ்லிம் நாடுகளுக்கே உரித்தானது தைரியம். எந்த வகையிலும் இந்தியாவை பழிவாங்குவேன்.
இவ்வாறு ஹெட்லி கூறியுள்ளான். ஹெட்லியின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவரின் தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பிறந்தது முதல் மேலை நாட்டுக் கலாசாரம் மற்றும் பாகிஸ்தான் கலாசாரத்தை எதிர்கொண்டு வளர்ந்தவன்.
தாவூத் கிலானி என்ற மற்றொரு பெயரும் இவனுக்கு உண்டு. இறுதியாக பயங்கரவாதத்தினால், ஈர்க்கப்பட்டுள்ளான்.ஹெட்லிக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மனைவி உண்டு. அவர் தன் குழந்தைகளுடன் சிகாகோவில் வசிக்கிறார். அதேநேரத்தில், ஹெட்லிக்கு அமெரிக்க பெண் தோழி ஒருவரும் உண்டு. அவர் நியூயார்க்கில் மேக் அப் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிகிறார்.புதிய சட்டம் :
இதனிடையே, அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தகாவுர் உசேன் ராணா, வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என, இந்தியாவில் விளம்பரம் கொடுத்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவரம் வெளியானதால், வெளிநாட்டு வேலை தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து, இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றும் கொண்டு வரப்படலாம் என, வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்
0 comments :
Post a Comment