குள்ளமான உருவம், சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் தோற்றம்... என பா படத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.
இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பிரமித்து போவார்கள். உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா.
ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சீனி கும் என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குனர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் ஒப்பனைக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றுகிறார் அமிதாப்.
இதற்காக அமிதாப்புக்கு சிறப்பாக மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம். அபிஷேக் பச்சனின் மகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் அமிதாப். டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது பா. இப்படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா.
உடம்பெல்லாம் புல்லரிக்க வைக்கும் ஏழு பாடல்கள்... அவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அசத்தலான பின்னணி இசை என அமிதாப் உள்ளிட்ட குழுவினரை அசர வைத்துள்ளாராம் ராஜா. குறிப்பாக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜா போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு தீம் மியூசிக் கேட்கும்போதே மனதை கரைத்து கலங்கடிக்கிறது.
மேலும் இளையராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞர் இவர். இவருடைய இசையில் நான் நடித்திருப்பது பெரும் பாக்கியம் என்று ஆனந்தத்தில் கண் கலங்கி கூறியுள்ளார்
0 comments :
Post a Comment