சூடு பிடிக்கும் ஹாட் மெயில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஹாட்மெயில் – ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட் மெயில் என்று இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் அதனை அப்படியே இயக்கத் தொடங்கியது. யாஹூ மெயில் முந்திக் கொள்ள, ஹாட் மெயில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

இடையே வந்த கூகுளின் ஜிமெயில், புயல் வேகத்தில் வசதிகளைத் தரத் தொடங்கியவுடன், அதன் இடத்தை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை, வேறு சிந்தனையின்றித் தன் பக்கமே இறுத்திக் கொண்டது ஜிமெயில். இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

மைக்ரோசாப்ட் இப்போது, தன் முழுக் கவனத்தினை ஹாட் மெயில் பக்கம் திருப்பியுள்ளது. அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பொலிவான, பயனுள்ள இயக்கத்தினைத் தர முயற்சிக்கிறது. இந்த புதிய தளம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 

இருப்பினும் தற்போது உருவாகி வரும் புதிய வசதிகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப் படித்த பின்னர், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய உறவை நிச்சயம் புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மெயில் கட்டமைப்பு:

 புதியதாகத் தரப்படும் பல வசதிகள், வெப்மெயில் தளங்களில் இதுவரை இல்லாத புத்தம் புதிய வசதிகளாகவே உள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும். ஜிமெயிலில் கூட இவற்றிற்கான இணை வசதிகள் இல்லை என்று கூடச் சொல்லலாம். 

ஜிமெயில் அடுத்தடுத்து வரும் இமெயில் மெசேஜ்களை, ஒரு உரையாடல் போலத் தொகுத்துத் தருகிறது. இது ஜிமெயிலைப் பொறுத்தவரை மாறாததாக உள்ளது. இப்படித்தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜிமெயில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹாட் மெயில் இதில் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறது. 

பழைய படி வரிசையாக வைத்துக் கொள்ளலாம்; அல்லது ஜிமெயில் போல உரையாடலாகவும் மேற்கொள்ளலாம். இரண்டிற்கும் ஆப்ஷன் தரப்படுகிறது. இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்கதாக இருக்கும். 

மற்ற வசதிகள் அனைத்தும் இரண்டு வகைகளில் உள்ளன. குழப்பமான இன்பாக்ஸைச் சரி செய்பவை. அடுத்து மெசேஜ்களுடன் வரும் போட்டோ, டாகுமெண்ட் மற்றும் பிற இணைப்புகளின் அடிப்படையில், இமெயில்களைக் கையாண்டு காட்டும் வசதிகளாகும்.

பிடிக்காத இமெயில் ரத்து: 

ஒருவர் அனுப்பிய மெசேஜ்கள் உங்களுக்கு அறவே பிடிக்கவில்லை! என்ன செய்வீர்கள்? வந்து விழுந்த இ மெயில் மெசேஜ்களை மொத்தமாக செலக்ட் செய்து அழித்துவிடுவீர்கள். அடுத்து மீண்டும் அவர் அனுப்பினால்? ஹாட் மெயிலில் இனி அந்த இமெயில் முகவரியிலிருந்து மெசேஜ் வந்தால், ஹாட் மெயில் தானாகவே அழித்துவிடும். இதன் மூலம் குப்பை மெயில்கள் உங்கள் இன் பாக்ஸை நிரப்புவது தடுக்கப்படும்.

புதிய வியூ மெனு: 

புதியதாகத் தரப்படும் இந்த வியூ மெனு மூலம், நீங்கள் படிக்காத மெசேஜ்களைத் தனியே பட்டியலிடுதல், குறிப்பிட்ட முகவரியிலிருந்து கிடைக்கும் மெயில்களை மட்டும் காணுதல், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களிலிருந்து வந்த மெயில்களை மட்டும் பார்த்தல் ஆகிய வகைகளில் பார்க்கலாம். 

மேலும் இடது பக்கம் தரப்படும் "Quick views" மெனுவின் மூலம், நீங்கள் குறித்த வைத்த மெயில்கள், போட்டோக்கள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், டாகுமெண்ட் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், கூரியர் நிறுவனங்களிலிருந்து வந்துள்ள மெயில்கள் மட்டும் எனத் தனித் தனிப் பட்டியல்களாக மெயில்களைக் காணலாம். 

போட்டோக்கள் அட்டாச் செய்யப்பட்டு அல்லது போட்டோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டு மெயில்கள் வந்தால், அவை தனியே ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள்,உங்கள் இன்பாக்ஸ் மீது பிரசன்டேஷன் தொகுப்பாகக் காட்டப்படும். ஆனால் இந்த வசதி பிகாஸாவில் உள்ள போட்டோக்களுடன் செயல்படவில்லை. 

இதற்கான காரணம் தெரியவில்லை. இதே போல மெயில் செய்திகளில் யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், இன் பாக்ஸிலிருந்து வெளியேறாமலேயே, அந்த வீடியோக்களைக் காணும் வசதி தரப்படுகிறது. 

போட்டோ ஷேரிங்: 

இந்த ஹாட்மெயில் தளத்திலேயே, போட்டோ ஷேரிங் வசதியும் தரப்படுகிறது. மைக்ரோசாப்டின் ஸ்கை டிரைவில் போட்டோக்களை சேவ் செய்கையில், அவற்றைக் காண நீங்கள் அனுமதிக்கும் நண்பர்களின் இமெயில் முகவரிகளைத் தந்துவிட்டால், இந்த தளமே அவர்களுக்கு அந்த செய்தியை மிக அழகான மெயில்கள் மூலம் அனுப்பும். 

இந்த இமெயில்கள் அவர்களுக்குச் சென்றவுடன், அவர்கள் இந்த போட்டோக்களை, ஒரு ஸ்லைட் ÷ஷா காட்சியாகக் காணலாம். அவர்களுக்கு விண்டோஸ் லைவ் முகவரி ஐ.டி. இருப்பின், அவர்கள் இந்த போட்டோக்கள் குறித்த தங்கள் குறிப்பினைப் பதியலாம்.

"பிங் மூலம் தேடல்'': 

இமெயில் விண்டோவில் "From Bing" என்ற வசதி தரப்படுகிறது. இதன் மூலம் இமேஜஸ், கிளிப் ஆர்ட், வீடியோஸ், மேப்ஸ் மற்றும் இணையதளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை அப்படியே ஒரு கிளிக் மூலம் உங்கள் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

வெப் அப்ளிகேஷன் இணைப்பு:

 ஹாட் மெயில் இமெயில் இன்பாக்ஸுடன், வெப் அப்ளிகேஷன்கள் இணைக்கப்படுகின்றன. மெயில் மெசேஜ் ஒன்றுடன் வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பார்மட்டில் ஏதேனும் ஒரு பைல் அட்டாச் செய்யப்பட்டிருந்தால், ஹாட் மெயில் உங்களின் அனுமதி கேட்டு, அதனை மைக்ரோசாப்ட் அண்மையில் தந்து வரும் வெப் அப்ளிகேஷன் மூலம் திறக்கும். 

இந்த பைல்களை எடிட் செய்திடவும் அனுமதிக்கும். நீங்கள் அந்த மெசேஜுக்கு பதில் அனுப்பினால், ஹாட் மெயில் வெப்பில் உள்ள, நீங்கள் எடிட் செய்த பைலுக்கான லிங்க் கொடுத்து, நீங்கள் மேற்கொண்ட எடிட்களைக் காட்டும். இது ஏறத்தாழ கூகுள் டாக்ஸ் எனப்படும் வெப் அப்ளிகேஷனை ஒத்தது என்றாலும், கூகுள் தரும் அனைத்து வசதிகளும் இதில் தரப்படவில்லை. குறிப்பாக கூகுள் வழங்கும் பி.டி.எப். வசதி இல்லை.

மொபைல் வழி இமெயில்: 

மொபைல் போன்களுக்கான, மொபைல் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஹாட்மெயில் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனில் இருந்து மெயில்களைப் படிக்கலாம். இருப்பினும் வேறு மொபைல் பிரவுசர் மூலமும் உங்களுக்கு வந்துள்ள மெயில்களைப் படிக்க ஹாட் மெயில் அனுமதிக்கிறது. 

ஹாட்மெயில் இது போன்ற பல புது வசதிகளுடன், தன் அடுத்த இன்னிங்ஸை இமெயில் போட்டியில் விளையாட வருகிறது. இந்த முறை தன் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி நிறைய வசதிகளைத் தரும் என்று எதிர்பார்ப்போம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes