ஒருவரின் மொபைல் எண்ணிற்கு போலி சிம்கார்டு பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் 3.92 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் செடிலா கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் அஞ்சன்குமார். இவரது வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே ஆன்-லைன் மூலம் பணத்தை யாரோ எடுத்து விட்டதாக, செடிலா கம்யூனிகேஷன் நிறுவன மேலாளர் பெரோஸ் ஷா என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வந்தது. பொதுவாக ஆன்-லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
மேலும், பாஸ்வேர்டு மாற்றினால் புதிய பாஸ்வேர்டுக்கான தகவலும் எஸ்.எம்.எஸ்., மூலம் தரப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு இந்த மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. சென்னை ஏழுகிணறு, போர்ச்சுகீஸ் தெருவைச் சேர்ந்த இம்ரான்கான் (21) இவனது கூட்டாளிகள் முகமது ஹக்கீம் (26) அப்துல் காலித் (25) ஆகியோர் கைது செய்யப்ப்டடனர்.
விசாரணையில் வெளியான தகவல்: இவர்கள் மூவரும் செடிலா கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் அஞ்சன்குமாரின், லெட்டர் பேட் போன்று போலி லெட்டர் பேடை தயாரித்தனர். இதை பயன்படுத்தி, அஞ்சன் குமார் அனுப்பியது போன்று, மொபைல் சிம்கார்டு தொலைந்து விட்டதாகவும், அதற்கு மாற்று சிம்கார்டு தருமாறும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இதனால், அஞ்சன்குமாரின் உண்மையான மொபைல் சிம்கார்டு செயலிழந்தது. போலி சிம்கார்டு பெற்ற அவர்கள் மூவரும், அதன் மூலம் அஞ்சன் குமாரின் கோட்டக் மகேந்திரா வங்கி நடப்பு கணக்கிற்கான பாஸ் வேர்டினை பெற்றனர்.
அதை உபயோகித்து கேமரா இல்லாத இன்டர் நெட் சென்டரில், இணையதளம் மூலம் அஞ்சன் குமாரின் வங்கிக்கணக்கில் இருந்து ஆன்-லைன் பரிமாற்றம் செய்து 3.92 லட்ச ரூபாயை எடுத்தனர். இதற்காக, முகமது ஹக்கீம் போலியாக சிராஜுதின் என்ற பெயரில் கோட்டக் மகேந்திரா வங்கியிலும், கரூர் வைஸ்யா வங்கியிலும் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருந்ததும் தெரிந்தது.
அந்த வங்கிக் கணக்குகளுக்கு அஞ்சன் குமாரின் வங்கியில் இருந்து ஆன்-லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்தனர். இந்த பணத்தை சென்னையில் உள்ள ஏ.டி.எம்., சென்டர்களில் முகம் தெரியாத அளவிற்கு பர்தா அணிந்து கொண்டு பணம் எடுத்தனர்.
இம்ரான் உள்ளிட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment