தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை 'பெயில்' ஆக்குவதா, 'பாஸ்' ஆக்குவதா என்ற பிரச்னை, கோவை மாவட்ட பள்ளி ஆசிரியர்களை ஆட்டிப் படைக்கிறது.
கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க மாணவர்களை பெயில் செய்வதாக சில ஆசிரியர்களும், 'தரமான மாணவர்களை உருவாக்க பெயில் ஆக்குவது அவசியம்' என, வேறு சில ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மேல் வகுப்புகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 'பாஸ்' செய்யப்பட்டனர். ஆனால், இந்தாண்டு மூன்று பாடங்களுக்கு மேல் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பெயில் ஆக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டதின் அடிப்படையில், பிளஸ்1ம் வகுப்பு மாணவர்களில் 5-10 சதவீதம் பெயில் ஆக்கப்பட்டுள்ளனர்.
மே 10ம் தேதி உடனடித் தேர்வு நடத்தி இம்மாணவர்களை பாஸ் செய்ய வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்1ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே 'டிரீட்மென்ட்' அளித்து வழிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நடந்த தேர்வுக் கமிட்டி கூட்டத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில், பள்ளிக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் பேரை பெயில் ஆக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்களை வடிகட்டி மேல் வகுப்புக்கு அனுப்பினால், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் உயரும் என்ற காரணத்துக்காக கல்வித் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
பெயில் ஆக்கப்படும் மாணவர்களில் எத்தனை பேர் மீண்டும் உடனடித் தேர்வு எழுதுவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இம்மாணவர்களை முறையாக 'பாலோ அப்' செய்தால் மட்டுமே இது சாத்தியம்.
கடந்த ஆண்டுகளில் இது போன்ற தொடர் கண்காணிப்பு ஆசிரியர் தரப்பில் இல்லாததால், ஏராளமான மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி குழந்தைத் தொழிலாளர்களாக மாறினர்.பள்ளி செல்லா மாணவர்கள் கோவையில் அதிகம் காணப்படுவதற்கு இதுவே காரணம்.
அனைவருக்கும் கல்வியை சட்டமாக்கி மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஒருபுறம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
ஆனால், மறுபுறம் அர்ப்பணிப்பு மனோபாவம் இல்லாத சில ஆசிரியர்களால் மாணவர்கள் பெயில் ஆக்கப்பட்டு, குழந்தை தொழிலாளர்களாகவும் சமூக விரோதிகளாகவும் உருவாக்கப்படுகின்றனர். சரியான குடும்ப பின்னணி, வழிகாட்டுதல், சிறந்த வளர்ப்பு உள்ள குழந்தைகள் நன்கு படித்து ஆளாகின்றனர்.
இவை கிடைக்காத ஏழை கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், வலுக்கட்டாயமாக பெயில் ஆக்கப்பட்டு பள்ளியில் இருந்து மறைமுகமாக துரத்தியடிக்கப்படுகின்றனர்.
எங்களை நம்பி படிக்க வரும் மாணவர்களை பெயில் ஆக்கி வீட்டுக்கு அனுப்புவதற்கா அரசு சம்பளம் வழங்குகிறது? அவர்களை படிக்க வைத்து சிறந்த மனிதர்களாக, சமுதாயத்துக்கு வழங்குவதே எங்கள் கடமை. நாங்கள் சரியாக செயல்படாமல் பழியை மாணவர்கள் மீது சுமத்தி தப்ப நினைப்பது நியாயம் அல்ல.
சினிமா போல் வகுப்பறையை மாற்ற வேண்டும். பாடத்தை கதை போல் விளக்க ஆசிரியர் ஒரு நடிகனாகவோ, காமெடியனாகவோ கூட மாறுவதில் தவறில்லை. கற்பித்தல் பணி நிறைவேற வேண்டும். படிப்பில் பலவீனமான மாணவர்களை தனியாக பிரித்து தனிக்கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் சிறந்தவர்களே. அவர்களின் வயது, ரசனைக்கேற்ப அவர்களை கையாள தெரியாத ஆசிரியர்கள் மீதுதான் தவறு. இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
'மண்டையில் எதுவுமில்லாமல் மேல் வகுப்புகளுக்கு மாணவர்களை 'புரமோட்' செய்வதால் அந்த மாணவனுக்கோ, அவன் சார்ந்துள்ள சமுதாயத்துக்கோ எந்தவித பயனும் இல்லை' என்கின்றனர் வேறு சில ஆசிரியர்கள்.
அவர்கள் கூறியதாவது:
அனைவரையும் புரமோட் செய்வதால் எந்த பயனும் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சாதாரண அடிப்படை கணக்கு கூட தெரியாமல் மேல் வகுப்புக்கு செல்லும் இம்மாணவர்களால் அதிகபட்சமாக பிளஸ் 2 வரை மட்டுமே செல்ல முடிகிறது.தமிழ், ஆங்கிலம் படிக்கக் கூடத் தெரியாத மாணவர்களுக்கு எங்கும் வேலையும் கிடைக்காது.
கோவை மாவட்டத்தில் மட்டுமே 'ஆல் பாஸ்' முறை உள்ளது. பிற மாவட்டங்களில் மாணவர்களை வடிகட்டுவதால் அம்மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. பெயில் ஆக்குவதை ஒரு தண்டனை என கருதக் கூடாது. மாணவனை தரம் மிக்கவனாக மாற்றும் ஒரு முயற்சி இது. அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும், என்றனர்.
படித்தால் மட்டுமே வெற்றி மாணவர்களுக்கு புது பாடம் : மாவட்ட கல்வி அலுவலர் முருகன் கூறியது:
மாணவர் நலனில் ஆசிரியர்கள் அக்கறையுடன் செயல்படுகின்றனர் என்ற எண்ணத்தை முதலில் மாணவர் மனதில் ஏற்படுத்தி விட்டால் ஒழுங்கும் கட்டுப்பாடும் தானாக வந்து விடும். மாணவர்கள் தங்களை மதிக்க வேண்டும்; பயப்பட வேண்டும், என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதே பிரச்னைகளுக்கு காரணம்.இன்றைய காலகட்டத்தில் இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே தரும்.
மாணவர்களை நண்பர்களாக, தங்கள் குழந்தைகளாக அணுகுவதே தீர்வு தரும். ஒன்பதாம் வகுப்பில் மூன்று பாடம் வரை தோல்வி அடைந்த, 75 சதவீத வருகை பதிவு இல்லாத 2-5 சதவீதம் பேரை பெயில் ஆக்க, தேர்வு கமிட்டி முடிவு செய்துள்ளது.
'படிக்கா விட்டால் தோல்வி உறுதி' என பெயில் ஆகும் மாணவர்களுக்கு உணர்த்தவே இந்த முடிவு. பெயில் ஆகும் மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் உடனடித் தேர்வு நடத்தப்படும். வருகைப் பதிவு 50 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை, என்றார்
0 comments :
Post a Comment