வலைமனை கட்டுவோமா?

இணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது.

இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் அதனை தாங்கிக் கொள்ள ஒரு சர்வருக்குக் கட்டணம் செலுத்தி அல்லல் படுவதைக் காட்டிலும் இலவசமாக ஒரு பிளாக் அமைப்பது மிகவும் எளிதான செயலாகப் போய்விட்டது.

இதற்கென பல தளங்கள் நமக்கு இலவசமாக இடமும் வசதிகளும் தந்தாலும் மூன்று தளங்கள் மக்களிடையே பிரபலமாகி யுள்ளன.
அவை:

1. Google Blogger/Blogspot (www.blogger. com)
2. Windows Live Spaces (http://spaces. live.com)
3. Wordpress (www.wordpress.com)

முதலில் பிளாக் என்பது என்ன? என்று பார்க்கலாம். “web log” என்பதன் சுருக்கமே Blog. அடிப்படையில் இது ஒரு ஆன்லைன் பத்திரிக்கை எனலாம். இதனை தனிநபர் தகவல் அறிவிக்கை யாகவும் வைத்துப் பயன்படுத்தலாம். அல்லது தங்கள் தொழில்களுக்கான அறிவிப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனிநபர் வலைமனையில் அவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள், தாங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம், ரசித்த கவிதை, படித்த புத்தகம், ருசித்த குழம்பு என எதனை வேண்டு மானாலும் எழுதி வைக்கலாம். இது வளர வளர ஒரு சுய சரிதையாக மாறிவிடும். உங்களுக்குப் பின்னரும் உங்கள் சந்ததியினர் மற்றும் பிறர் பார்த்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வர்த்தக ரீதியான வலைமனைகள் உங்கள் வர்த்தகம் குறித்த மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகளாகச் செயல்படும். விளம்பரங்களையும் இதில் சிலர் வெளியிடுகின்றனர்.

பிளாக் தயார் செய்து வெளியிட உதவும் இந்த மூன்று தளங்கள் தரும் சேவைகளைக் காணலாம்.


1. Google Blogger/Blogspot:

ஆகஸ்ட் 1999ல் சதா பீர் குடித்துக் கொண்டிருந்த மூன்று நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளமே பிளாக்குகளுக்கான சேவையைத் தொடங்கியது. அப்போது இது பைரா லேப்ஸ் (Pyra Labs) என்ற பெயரில் ஒரு நிறுவனமாக இயங்கியது.

கூகுள் இதனை 2003 ஆம் ஆண்டில் வாங்கியது. இந்த தளத்தில் பிளாக் உருவாக்கும் உதவியினைப் பெற முயற்சிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். இதனை Blogger.com அல்லது Blogspot.com என்பதா? இரண்டுமே ஒன்றுதான். எந்த பெயரை யூ.ஆர்.எல். ஆக அமைத்தாலும் ஒரே தளத்திற்குத் தான் செல்லும். ஆனால் இதில் பிளாக் ஒன்றை உருவாக்கிநால், அதற்கு உங்கள் பெயருடன் “.blogspot.com” என்று இணைந்துதான் கிடைக்கும்.

இந்த தளத்தின் மூலம் ஒரு பிளாக் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஜிமெயில் முகவரி ஒன்று வேண்டும். இதுவரை இல்லை என்றால் உடனே ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள். இது எளிது மட்டுமல்ல; இலவசமும் கூட என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் பிளாக் அமைப்பதில் புதியவர் என்றால் இந்த தளத்தில் தொடங்குவதே நல்லது.

இது இலவசம் என்பதால் மட்டுமல்ல; மிக எளிதாக இங்கு பிளாக் ஒன்றை அமைக் கலாம் என்பதே. இது இலவசம் என்பதாலேயே சில விஷயங்கள் நாம் விருப்பப்படாமலேயே நம் பிளாக்கில் இடம் பெறும். நம் பிளாக்கின் மேலாக நீள் செவ்வகக் கட்டம் ஒன்று இருக்கும். அதில் பிளாக் லோகோ ஒன்று இடம் பெறும். அதனை அடுத்து ஒரு பட்டன் இருக்கும்.

இதில் கிளிக் செய்தால் உங்கள் பிளாக் போல அமைக்கப்பட்டிருக்கும் மற்ற பிளாக்குகளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது கொஞ்சம் உங்கள் பிளாக்குகளைப் பார்வை யிடுபவர்களின் கவனத்தை உங்கள் பிளாக்கிலிருந்து இழுத்து மற்றவர்களின் பிளாக்குகளுக்கு அல்லவா கொண்டு செல்லும். இதனை நீக்க முடியாது.

எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் மற்றும் சிஸ்டத்தில் வல்லுநராக இருந்தால் இதனை நீக்குவதில் முயற்சிக்கலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அப்படி செய்வது கூகுள் நிறுவனம் விதிக்கும் விதிமுறைகளுக்கு எதிரான தாகும்.

கூகுளின் பிளாக்கர் டாட் காம் தளத்தின் மூலம் பிளாக் அமைப்பதில் பல அனுகூலங்கள் கிடைக்கின்றன. இதன் வளைந்து கொடுக்கும் தன்மை நமக்கு அதிகம் உதவுகிறது. நீங்கள் எந்த அளவிலும் எவ்வளவு ஸ்பேஸ் எடுத்தும் உங்கள் பிளாக்கினை அமைக்கலாம். பிளாக் அமைப்பதற்குத் தரப்படும் இன்டர்பேஸ் அருமையாக எளிமையாக உதவிகளைத் தருகிறது.

இங்கு உங்கள் பிளாக்குகளுக்கான டெம்ப்ளேட்டுகள் நிறைய கிடைக்கின்றன. இங்கிருந்து மேலும் பல டெம்ப்ளேட்டு களைத் தேடி எடுத்தும் பயன்படுத்தலாம்.

பிளாக்கர் டாட் காம் தளத்தின் இன்னொரு சிறப்பு உங்கள் பிளாக் தனி இலவச டொமைன் ஆக இருப்பதுதான். உங்களுடைய பெயர் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் என உங்கள் பிளாக் டொமைன் பெயரில் இருக்கும். இது போல இலவசமாக டொமைன் ஒன்றை பிளாக்கிற்குத் தருவது இந்த தளம் மட்டுமே.

நீங்கள் விரும்பினால் உங்கள் பெயரைப் பதிவு செய்து, உங்கள் பெயர் மட்டும் கொண்டு பெயர் டாட் காம் என்ற முகவரி பெற்று உங்கள் பிளாக்கினை இதில் லிங்க் செய்திடலாம். இதற்கு ஆண்டு தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் கூகுள் எந்த கட்டணமும் இன்றி இந்த சேவையை வழங்குகிறது.


2. Windows Live Spaces:

உங்களிடம் எம்.எஸ்.என். ஹாட்மெயில், எம்.எஸ்.என். மெசஞ்சர் அல்லது மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் அக்கவுண்ட் இருந்தால் உங்களுக்கு விண்டோஸ் லைவ் ஸ்பேஸஸ் தளத்தில் இடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு வாக்கில் வெப் 2.0 பிரபலமான வேளையில் மைக்ரோசாப்ட் இதனை கூகுள் நிறுவனத்தின் பிளாக்கர் டாட் காம் தளத்திற்கு போட்டியாகத் தொடங்கியது.

இது இதன் பெயருக்கேற்ப இயங்குகிறது. இங்குள்ள பிளாக்குகள் ஜஸ்ட் பிளாக்குகள் மட்டுமல்ல. உங்களுக்கான உயிர்த் துடிப்புள்ள இடம் என்கிறது மைக்ரோசாப்ட். நீங்கள் உங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு இடத்தை மைக்ரோசாப்ட் தருகிறது.

இங்கு பிளாக்குகளுக்குக் கிடைக்கும் டிசைன் அனைவரையும் கவர்வதாக உள்ளது. எளிமையாகவும் கவரும் வகை யிலும் உள்ளது. இதில் கூகுள் பிளாக்குகளில் உள்ளது போல மேலே பார் எதுவும் இல்லை. இங்கு பிளாக்கு களுக்கான தீம் என்னும் மையக் கருத்தினைப் பார்த்தால் இது குழந்தை களுக்கானது போல் இருக்கும். பெரிய எண்ணிக்கையில் தீம்கள் இல்லை என்றாலும் இங்கு தரப்படுபவை நமக்குப் போதுமானதாகவே உள்ளன.

லைவ் ஸ்பேஸஸ் என்னும் இந்த பிளாட் பாரம் தான் பிளாக்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மற்ற சாப்ட்வேர் புரோகிராம் களுடன் இணைக்கின்றன. லைவ் சூட், விண்டோஸ் லைவ் போட்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் லைவ் ஹோம், விண்டோஸ் லைவ் குரூப், விண்டோஸ் லைவ் ஈவன்ட்ஸ், ரைட்டர் மற்றும் லைவ் டூல் பார் ஆகியவற்றுடன் நேரடி இணைப்பு உங்கள் பிளாக்குகளுக்குக் கிடைக்கிறது. இவற்றின் தொடர்புகள் மூலம் உங்கள் பிளாக்குகளை மிகச் சிறப்பாக அமைக்க முடியும்.


3. Wordpress:

இங்கும் இரண்டு யு.ஆர்.எல். முகவரிகள் கிடைக்கின்றன. Wordpress.com மற்றும் Wordpress.org இதில் எது சரி? இரண்டுமே சரிதான். வேர்ட்பிரஸ்.காம் பிளாக்குகளை அனைவருக்கும் இலவசமாக தன் தளத்தில் வைத்திட அனுமதி அளிக்கிறது. ஒரு சில வரையறைகள் மட்டுமே இங்கு உண்டு. இதற்கு மாறாக வேர்ட் பிரஸ் டாட் ஓ.ஆர்.ஜி. பின்புலத்தில் ஓப்பன் சோர்ஸ் கட்டமைப்பை நமக்கு இலவசமாக வழங்கி பிளாக்குகளை அமைத் திட உதவுகிறது.

ஆனால் வடிவமைக்கப் பட்ட பிளாக்குகளை தங்கள் தளத்தில் இலவசமாக பதிய வைப்பதில்லை. இதற்கென தனியே ஒரு டொமைன் பெயர் கட்டணம் செலுத்திப் பெற்று பின் சர்வர் ஒன்றில் இடத்தையும் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.

ஆனால் பிளாக் ஒன்றை அமைப்பதில் மிக மிக எளிதாக அமைக்கும் வகையில் வழிகாட்டுவது இந்த தளம் தான்.இதனாலேயே பலரும் பிளாக்குகள் உருவாக்க இந்த தளத்தை நாடுகின்றனர். வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத வகையில் 4,245 ப்ளக் இன் வசதிகளும் 628 தீம்களும் இந்த பிளாட்பாரத்தில் கிடைக்கின்றன.

இந்த தளத்தில் நுழைந்து பிளாக் அமைக்கும் வசதியினைப் பெற இந்த தளத்தில் பதிவு செய்திட வேண்டும். மற்ற இரண்டினைப் போல உங்கள் பதிவு உங்கள் இமெயிலுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை. இங்கு பதிவு செய்து நுழைந்தவுடன் ஒரு டேஷ் போர்டினைப் பார்க்கலாம். இங்கிருந்து தான் உங்கள் பிளாக் அமைக்கும் வேலையை எப்போதும் மேற்கொள்ள வேண்டும்.

குடும்ப ரீதியாக ஒரு பிளாக் அமைக்க விரும்பி நீங்கள் விண்டோஸ் சர்வீஸ் விரும்பினால் விண்டோஸ் லைவ் ஸ்பேஸ் உங்களுக்கு உகந்தது. இப்போதுதான் பிளாக் அமைக்கும் தொடக்க வாதியா நீங்கள்? அப்படி யானால் பிளாக்கர் டாட் காம் உங்களுக்கு நல்ல வழி காட்டும்.

மிகவும் சீரியஸான முறையில் பிளாக் ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி சிறப்பான பிளாக்காக எதிர்காலத்தில் அமைக்க விரும்பினால் உங்களுக்குத் தேவையான தளம் வேர்ட்ப்ரெஸ்.

என்ன! உங்களுக்கான வலைமனையை அமைக்கக் கிளம்பிட்டீங்களா! காசு பணம் இல்லாமல் சரித்திரத்தில் உங்கள் தகவல்களை அமைக்க இதைக் காட்டிலும் சிறந்த சாதனம் உங்களுக்குக் கிடைக்காது. எனவே ஆளுக்கு ஒரு பிளாக் அமைத்து நம் கருத்துக்களை எழுதி வைப்போம்.


2 comments :

ad at January 2, 2012 at 12:14 AM said...

முழுமையான விளக்கம்.விண்டோஸ்லைவ்விலும் ப்ளாக் வசதி உண்டென்பது இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
பகிர்விற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் at January 2, 2012 at 4:00 PM said...

தெரியாத பல தகவல்கள். ப்ளாக் வைத்துள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பரே !

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes