இந்திய மொபைல் சாதனங்கள் சந்தையில், 2011 ஆம் ஆண்டு 657 புதிய மொபைல் சாதன மாடல்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களையும் சேர்த்த தாகும்.
மொபைல் பயன்படுத்தும் ஏறத்தாழ 89 கோடி வாடிக்கையாளர்கள் தேர்ந் தெடுக்க, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மொபைல் மாடல் போன்கள் இருந்தன.
ரூ.1,800 விலையில் வெளியான சாதாரண மொபைல் முதல், ரூ.49,000 என்ற விலையில் வெளியான ஐ-போன் 4எஸ் வரை, அனைவருக்கும் ஏற்ற மொபைல் சாதனங்கள் கிடைத்தன. டேப்ளட் பிசிக்களையும் சேர்த்து 657 சாதனங்கள் வெளியாகின.
வெளியான சாதனங்களில், மிக அதிகமான சாதனங்கள் ஜாவா சிஸ்டத்தில் இயங்கு பவையாக இருந்தன. இந்த சிஸ்டத்தில் இயங்கும் புதிய நவீன வசதிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இணைய பிரவுசிங், பதிந்தே கொடுக்கப்பட்ட அப்ளிகேஷன் கள், கூடுதல் திறன் கொண்ட கேமராக்கள், தொடுதிரைகள், மேப்களைக் காட்டும் வசதி என இவற்றை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
ஜாவா சிஸ்டத்திற்கு அடுத்தபடியாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் சாதனங்கள் அதிக எண்ணிக்கையில் வெளி வந்தன. அடுத்தபடியாக, நோக்கியாவின் எஸ்40, அன்னா மற்றும் சிம்பியன் இணைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
இவை கொண்டு வெளிவந்த நோக்கியாவின் புதிய மாடல் போன்கள் 13. அடுத்ததாக ஐ.ஓ.எஸ். மற்றும் பிளாக்பெரி நான்காவது இடத்தைக் கொண்டன. ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்கள் தலா ஏழு புதிய மாடல்களை அறிமுகப் படுத்தின.
அண்மைக் காலத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் நுழைந்த விண்டோஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. சாம்சங் தன்னுடைய படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒரே ஒரு மாடலை வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
2011ல் வெளியான மொபைல் போன் புதிய மாடல்களைக் நிறுவனங்கள் அடிப்படையில் கணக்கில் கொண்டால், மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனமே அதிக எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 52 புதிய மாடல்களை வெளி யிட்டது.
அடுத்த இடத்தில் பிளை மொபைல்ஸ் 41 மாடல்களுடன் இருந்தது. இதில் ஒரு டேப்ளட் பிசியும் அடக்கம். தன் இடத்தை உறுதியாகத் தக்க வைக்க போராடி வெற்றி கண்ட சாம்சங், 39 மாடல்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்தது.
இதே இடத்தை ஸ்பைஸ் (எஸ் மொபிலிட்டி) நிறுவனமும் அதே எண்ணிக்கையில் புதிய மாடல்களை வெளியிட்டுக் கொண்டுள்ளது. வீடியோகான் மற்றும் கார்பன் மொபைல்ஸ் நிறுவனங்கள் தலா 35 மாடல்களை வெளியிட்டு அடுத்த இடத்தைப் பிடித்தன. இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் 26 மாடல்களை வெளியிட்டது.
இந்தியாவின் முதல் புரஜக்டர் போனான ஐ.என்.8809 மாடலை இந்நிறுவனம் வெளியிட்டு பெயர் பெற்றது. மைக்ரோமேக்ஸ் 23 மாடல்களைக் கொண்டு வந்தது. அடுத்து பீடெல் இடத்தைப் பிடித்தது. எல்.ஜி. 17, ஓனிடா 16 மாடல்களை வெளியிட்டு முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பெற்றன.
முதல் முதலாக தனது இரட்டை சிம் போனை வெளியிட்ட நோக்கியா மற்றும் சீன நிறுவனமான ஹூவே தலா 15 புதிய மாடல்களுடன் பத்தாவது இடத்தைப் பிடித்தன. ஜி ஃபைவ் மற்றும் ரெட் நிறுவனங்கள் தலா 14 மாடல்களையும், சோனி எரிக்சன் 13, எச்.டி.சி. மற்றும் ஏர்போன் 12 மாடல்களையும் வெளியிட்டன.
இரண்டு சிம் இயக்கம், 3 ஜி சேவை, மொபைல் போன் ஒன்றின் சராசரி விலை குறைவு ஆகிய மூன்று காரணங்கள் சென்ற ஆண்டில் மொபைல் போன்கள் விற்பனைக்கு முதன்மை காரணங்களாக இருந்தன.
தங்களுடைய விற்பனையாளர்கள், ஸ்டாக்கிஸ்ட்டுகள், டீலர்களுடன் நல்ல மார்ஜின் தரும் விற்பனை ஒப்பந்தத்தினை மேற்கொண்டதாலும், விலை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு இந்திய வாடிக்கையாளர்கள் இயங்குவதனைப் புரிந்து கொண்டதாலும், இந்திய நிறுவனங்கள் பல புதிய மாடல்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி, நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய வசதிகளைக் கொண்டு வெளியான ஸ்மார்ட் போன்களும் தங்கள் விற்பனையை அதிகப்படுத்திக் கொண்டன.
2012 ஆம் ஆண்டிலும் மொபைல் போன் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும். பெரிய நகரங்களில் இது அதிக பட்ச எல்லையைத் தொட்டுவிட்டதால், கூடுதல் விற்பனை இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலேயே இருக்கும்.
0 comments :
Post a Comment