லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது.

இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.


2 comments :

aotspr at January 26, 2012 at 10:45 AM said...

பயன்னுள்ள தகவல்!..,...



"உங்கள் தகவலுக்கு நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

திண்டுக்கல் தனபாலன் at January 26, 2012 at 6:57 PM said...

மிகவும் பயனுள்ள பதிவு! நன்றி சார்!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes