மொபைல் போன்களில் சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அருமையான தொழில் நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்பதாகும். மொபைல் போன்களைப் பயன்படுத்தி, நாம் பணம் செலுத்த இந்த தொழில் நுட்பம் வழி செய்கிறது.
2011 ஆம் ஆண்டில் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ். ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், இது 8 கோடியாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில், பல நிறுவனங்கள், குறிப்பாக சாம்சங், ஆர்.ஐ.எம்., நோக்கியா மற்றும் எச்.டி.சி., இந்த வசதியுடன் மொபைல் போன்களை வடிவமைத்துத் தந்துள்ளன.
நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனை இன்னும் அறிமுகம் செய்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
"போனை அசைத்து பணத்தைச் செலுத்திடு' என்பதுதான் இந்த தொழில் நுட்பம் தரும் பெரிய வசதி. 4 அங்குல இடைவெளியில் இரண்டு சாதனங்கள், அவற்றை அசைப்பதின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த தொழில் நுட்பம் வசதி தருகிறது.
தற்போது லண்டன் நகரில் ட்ரான்ஸ்போர்ட் கார்ட்கள் மூலம் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருட்களை விற்பனை செய்திடும் கடைகளில் உள்ள சிறிய டெர்மினல் முன்னால், செலுத்த வேண்டிய பணத்தை மொபைலில் குறிப்பிட்டு சற்று அசைத்தால், செலுத்தப்பட வேண்டிய பணம் குறித்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு, பணம் கடைக்காரரின் அக்கவுண்ட்டில் சேர்ந்து விடுகிறது.
இதற்கு மொபைல் வைத்திருப்பவர், முதலில் தன் பணத்தை, இதற்கான அக்கவுண்ட்டில் செலுத்தி வைத்திருக்க வேண்டும். பர்ஸில் பணம் போட்டு வைத்திருப்பதனைப் போன்றது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது அனைத்து நாடுகளிலும், இந்தியா உட்பட, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment