உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தை (செப். 27) முன்னிட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "ஹார்ட் எக்ஸ்னோரா' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதய மருத்துவ நிபுணரும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் வி. சொக்கலிங்கம், எக்úஸôனோரா இண்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம். பி. நிர்மல், ஆண்டர்சன் பரிசோதனை மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. ஆனந்த், நடிகர் சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-
""ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) இந்த ஆண்டு குறிக்கோள் "இதயபூர்வமாக செயல்படு' என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும்.
கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத சீரான உணவு முறை, தினமும் தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சி, புகை - மதுவைத் தவிர்த்தல் ஆகியவை மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
புகை பிடித்தல், உணர்ச்சிவசப்படுதல் உள்ளிட்ட தவறான வாழ்க்கை முறை காரணமாக இந்தியாவில் 19 வயது இளைஞருக்குக்கூட மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
100 ஏழைக் குழந்தைகளுக்கு...: இந்த அமைப்பின் மூலம் முதல் கட்டமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 ஏழைக் குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் இந்தக் குழந்தைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவசமாக இதய மருத்துவப் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
செப்டம்பர் 27-ல்...: இதய நோய் விழிப்புணர்வு தினத்தை (செப். 27) முன்னிட்டு "இதயம் காக்க' என்ற தலைப்பில் நூல், குறுந்தகடு வெளியீடு, இணையதளம் தொடக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கக் கூடத்தில் நடைபெறும் இந்த விழாவில் விடியோ, ஆடியோ குறுந்தகட்டை துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிடுகிறார். நிதி அமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார்.
உலக சமுதாய சேவை மையத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம், அமைச்சர் நேரு, நடிகர் கமல்ஹாசன், ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்'' என்று அவர்கள் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment