காங்கிரஸில் சேருகிறாரா விஜய்?
தமிழ்த் திரையுலகில் இளைய தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் (35), இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது; இருப்பினும் கட்சியில் அவர் ஏதாவது முக்கிய பதவியை ஏற்பாரா என்பதுதான் இதுவரை தெரியவில்லை.
தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும், அதை அரசியல் வாயிலாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் விஜய், ஏற்கெனவே மக்களின் ஆதரவைப் பெற்ற தேசியக் கட்சியில் இணைந்து அதில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார்.
லயோலா கல்லூரியில் படித்த பட்டதாரியான விஜய், உலக நடப்புகளிலும் நாட்டு நடப்புகளிலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.
எனவே, அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில், அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், "விஜய் அரசியலில் ஈடுபடுவதில் மாற்றுக்கருத்து இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் புதுகோட்டையில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழா ஒன்றில் தன் அமைப்புக்கு ""மக்கள் இயக்கம்'' என்ற பெயரையும் சூட்டினார் நடிகர் விஜய். இந்த இயக்கம் சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார். மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் அவர் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளார் என அவரது தரப்பு செய்திகள் தெரிவித்தன.
அதே சமயம், தேசியக் கட்சியாக விளங்கும் காங்கிரஸில் தமிழ் மாநிலப் பிரிவில் பெயர் சொல்லக் கூடிய சினிமா நட்சத்திரங்கள் யாரும் இப்போது இல்லை என்பது காங்கிரஸ் வட்டாரத்தில், அதுவும் குறிப்பாக இளைஞர் பிரிவினரிடம் நீண்ட காலக் குறையாக இருக்கிறது. அதைப் போக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜயின் சந்திப்பு தில்லியில் சமீபத்தில் நடந்தது.
அரசியல் பாதையில் தடம் பதிக்க நினைத்த விஜயும், நட்சத்திரத்தை இழுக்க நினைத்த காங்கிரஸ் தலைவரும் சந்தித்துக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட விஜய், தான் யார், தனது ரசிகர்களின் பலம் என்ன, மன்றங்களின் எண்ணிக்கை என்ன என்பன போன்ற தகவல்களை அவரது இணையதளத்துக்கு அனுப்பி வைத்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.
இதை அறிந்த ராகுலும் விஜயைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய், ராகுலின் சந்திப்பு தில்லியில் அரங்கேறியுள்ளது. அப்போது, தமிழகத்தில் கட்சியின் நிலை மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் 45 நிமிஷங்கள் பேசி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதை ராகுல் காந்தியிடம் நடிகர் விஜய் அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் அறிவிப்பு? இதையடுத்து, நடைபெற்ற மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸில் சேருவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு தரப்பினரும், தனிக் கட்சியாகச் செயல்படலாம் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இதனால், காங்கிரஸில் இணைந்து பொறுப்புகளை ஏற்க நடிகர் விஜய் தயங்குவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதாக இருந்தால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே இந்த வாரத்தில் வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment