பங்குச் சந்தை தொடர்ந்து நான்காம் நாளாக வியாழக் கிழமையும் சரிவைச் சந்தித்தது. 69 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 15,398 புள்ளிகளாகக் குறைந்தது.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் வசமிருந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததும் பங்குச் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. ஏற்றுமதி சரிவு, பருவ மழை குறைவு, உற்பத்தித் துறையில் நிலவும் தேக்க நிலை ஆகியன முதலீட்டாளர்களை பாதிக்கும் விஷயங்களாக அமைந்தன.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 963 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்பனை செய்ததாக "செபி' தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் மைனஸ் 0.21 சதவீதமாக குறைந்தபோதிலும் அது பங்குச் சந்தை சரிவைத் தடுக்கப் போதுமானதாக அமையவில்லை.
தேசிய பங்குச் சந்தையில் 15 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 4,593 புள்ளிகளாகச் சரிந்தது. பொதுவாக முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீத சரிவைச் சந்தித்து ரூ. 1,932.10-க்கு விற்பனையானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த நான்கு வர்த்தகங்களில் இந்நிறுவனப் பங்கு விலை 6.7 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவை பகிர்ந்து கொள்வதில் சகோதர நிறுவனத்துடனான மோதல் போக்கு காரணமாக இந்நிறுவனப் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் 1.95 சதவீதம் சரிந்து ரூ. 813.40-க்கு விற்பனையானது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்து ரூ. 509.80-க்கும், ஹீரோ ஹோண்டா பங்குகள் 0.8 சதவீதம் குறைந்து ரூ. 509.80-க்கும் விற்பனையானது.
பார்தி ஏர்டெல் 1.77 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.62 சதவீதமும், டாடா பவர் 1.34 சதவீதமும், ஓஎன்ஜிசி 1.24 சதவீதமும், எல் அண்ட் டி பங்குகள் 1.14 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 5.31 சதவீதம் உயர்ந்தது.
ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் 1.64 சதவீதமும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்குகள் 1.06 சதவீதமும் உயர்ந்தன. ஒட்டுமொத்தமாக 1,402 பங்குகளின் விலைகள் உயர்ந்தன. 1,350 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ஒட்டுமொத்தமாக வியாழக்கிழமை ரூ. 5,132.57 கோடிக்கு பங்கு விற்பனை நடைபெற்றது. புதன்கிழமை ரூ. 5,440.54 கோடிக்கு பங்குகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சுஸ்லான் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 274.53 கோடிக்கு விற்பனையாயின.
0 comments :
Post a Comment