ஏழு ஆண்டுகளுக்கு முன், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், 21 தேதி, ட்விட்டர் இணையதளம் தொடங்கப்பட்டு, முதல் தகவல் பதியப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கதாய் உள்ளது.
தொடக்கத்தில், தகவல் அவ்வளவாக இல்லாமல், வெற்றிடம் கொண்டதாய் இருந்த ட்விட்டர் தளம், பின்னாளில் உலகின் முக்கிய குடிமக்கள் பயன்படுத்துவதாய் மாறியது. உலக நிகழ்வுகளை அறிய உண்மையின் உரைகல்லாய் இன்று ட்விட்டர் தளம் உள்ளது.
மக்களைப் பற்றி அறிய, பல வர்த்தக பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள, இதுவே நம்பகத்தன்மை கொண்ட தளமாய் இன்று இயங்குகிறது. ஏன், இடர் நிகழும் காலங்களில், உதவி தேடும் உன்னத சேவைத் தளமாகவும் ட்விட்டர் இன்று செயல்படுகிறது.
இன்று, 20 கோடிக்கு மேலாக, தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 40 கோடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன, என்று ட்விட்டர் தளத்தின் இயக்குநர் கரன் விக்ரே தெரிவித்துள்ளார்.
முதன் முதலில் தொடங்கிய போது, இதில் பங்கெடுத்த வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய பீட்ஸா, சாண்ட்விச் போன்ற தகவல்களை அளித்து வந்தனர். இப்போது முற்றிலும் மாறுபட்ட வகையில், மிகவும் பொறுப்புள்ள தகவல்கள் இதில் கிடைக்கப் பெறுகின்றன.
சென்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ட்விட்டர் தளம் முக்கிய பங்காற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியிட்ட இரு பிரிவும், தங்களின் பொறுப்பான பிரச்சாரத்தினை இதன் மூலம் அளித்து, வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டின.
அது மட்டுமின்றி, மக்கள் எப்படி தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களைத் தேர்வு செய்திட வேண்டும், எந்த வகையில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த நடுநிலையான தகவல்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டன.
பூகம்பம், எரிமலைச் சீற்றம், சுனாமி புயல் போன்ற பேரிடர் நிகழ்வுகளின் போதும், ட்விட்டர் அரும் பங்காற்றியது இங்கு நினைவு கூறத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பதவியிலிருந்து விலகிய பதினாறாம் போப் பெனடிக்ட், தன் 16 லட்சம் ஆதரவாளர்களுக்குத் தன் பிரியாவிடைச் செய்தியை அளிக்க ட்விட்டர் தளத்தையே பயன்படுத்தினார். அவருக்குப் பின் வந்த போப் பிரான்சிஸ், தன் 20 லட்சம் ஆதரவாளர்களுக்கு செய்தி தர இத்தளத்தினையே கையாண்டார்.
ட்விட்டர் மிகவும் குறைந்த ஆண்டுகளே புழக்கத்தில் இருக்கலாம்; இன்னும் பலருக்கு புதியனவாக இருக்கலாம். ஆனால், வலுவான, முக்கிய தகவல்களைத் தருவதில் இதுவே முதல் இடத்தைக் கொண்டுள்ள சமூக தளமாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த தளம் பயன்படுத்தப்படும் விதத்தில், வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அடுத்து இந்த சமுதாய இணையதளம் என்ன செய்யப் போகிறது? எந்த திசையில் வளர்ச்சியை மேற்கொள்ளப் போகிறது? என்பது பலரின் கேள்விகளாக உள்ளது.
இதன் வாடிக்கையாளர்கள் இதனை விரும்புவதற்கான காரணம், இதில் செயல்படுவது எளிமையாகவும், வேகமாகவும், அனைத்தையும் அரவணைத்துச் செயல்படுத்துவதாகவும் இருப்பதால் தான். இந்த குணத்தை இந்த தளம் இழக்கும் பட்சத்தில், இது இன்னொரு பேஸ்புக் தளமாக மாறிவிடும்.
எனவே, இதன் போக்கில் இது வளர்வதே நல்லது என இதன் வாடிக்கையாளர்களிடையே மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வாறே, ட்விட்டர் வளர்ச்சி அடைந்து மாற்றங்களைத் தரும் என எதிர்பார்ப்போம்.
0 comments :
Post a Comment