விண்டோஸ் 8 சிஸ்டத்தில், வீடியோ பிளேயர் சாப்ட்வேர் இணைத்துத் தரப்படவில்லை. சென்ற ஆண்டில், தன் இணைய தள வெளியீடு ஒன்றில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கான காரணத்தை வெளியிட்டது.
பட டிஸ்க் விற்பனை குறைந்து வருகிறது என்றும், டிவிடி பிளேயர் சாப்ட்வேர் தொகுப்பிற்கான உரிமத் தொகை பிரச்னைக்குரியதாக மாறி வருகிறது என்றும் குறிப்பிட்டு, இதனால் டிவிடி பிளேயர் தரப்படவில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால், டிவிடி டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் படிக்க இயலும்.
அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டம் வைத்திருக்கும் கம்ப்யூட்டரில், டிவிடி திரைப்படங்களைப் பார்க்க இயலாதா? மைக்ரோசாப்ட் வியாபார ரீதியில் இதற்கான பதில் ஒன்றைத் தந்துள்ளது.
நீங்கள் விண்டோஸ் 8 ப்ரோ பதிப்பு கொண்டிருந்தால், விண்டோஸ் மீடியா சென்டர் பேக் என்ற சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது சும்மா கிடைக்காது. கட்டணமாக 10 டாலர் செலுத்த வேண்டும்.
இந்த தொகுப்பினை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எப்படித் தரவிறக்கம் செய்வது என,http://windows.microsoft.com/enus/windows8/featurepacks என்ற முகவரியில் உள்ள தன் தளத்தில், மைக்ரோசாப்ட் வழி காட்டியுள்ளது.
சாதாரண விண்டோஸ் 8 சிஸ்டம் மட்டும் வைத்திருந்தால், இதற்கு 100 டாலர் செலுத்த வேண்டும். பலரும் இதனைப் படித்துவிட்டு, சிறிது அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
சிலரோ, அடப் போங்கய்யா, இதற்கு வழியா இல்லை என்று கூறி, ஓரிரு நிமிடங்களில் வழியைக் கண்டுபிடித்து, செயல்பட்டு, படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். அது என்ன வழி. http://www.videolan.org/vlc என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள்.
அதிலிருந்து, மிகப் பிரபலமான வீடியோ லேன் நிறுவனத்தின் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பான, வி.எல்.சி. மீடியா பிளேயரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து, உங்களுக்குப் பிரியமான சினிமா பார்க்கத் தொடங்குங்கள்.
0 comments :
Post a Comment