அண்மையில் தான் வெளியிட்ட பேட்ச் பைல் தொகுப்பில் உள்ள பைல் ஒன்றினை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடும்படி, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றினை வழங்கியுள்ளது.
இந்த பைல், விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கும் போது, அடிக்கடி சிஸ்டம் கிராஷ் செய்தியினை வழங்குகிறது. இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் (‘Blue Screen of Death BSOD’) என பொதுவாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அழைப்பார்கள்.
இந்த செய்தி திரையில், நீல வண்ணக் கட்டத்தில், கம்ப்யூட்டர் இயங்க இயலா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, உடனடியாகக் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கக் கேட்டுக் கொள்ளப்படும்.
வேறு வழியே இல்லை; மீண்டும் இயக்கித்தான் ஆக வேண்டும். இந்த குறிப்பிட்ட பைல் இயக்கம், இது போல அடிக்கடி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட செய்தி தந்து கொண்டே இருப்பதாகத் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, மைக்ரோசாப்ட் தன் தவறான பைலை அன் இன்ஸ்டால் செய்திடும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்ற ஏப்ரல் 8, வழக்கமான இரண்டாம் செவ்வாய்க் கிழமை அன்று, இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. இது வெளியான உடனேயே, இந்த பைலின் தவறான செயல்பாட்டினை உணர்ந்து கொண்ட மைக்ரோசாப்ட் இதனை தன் தளத்திலேயே சீர் செய்தது.
ஆனால், ஆட்டோமேடிக் அப்டேட் முறையில், தானாகவே தங்கள் கம்ப்யூட்டர் அப்டேட் ஆகும் வகையில் செட் செய்தவர்களுக்கு, இந்த பிரச்னை உலகெங்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து அடிக்கடி, தங்கள் கம்ப்யூட்டர்களை ரீபூட் செய்திடும் நிலைக்கு ஆளாகி, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த இயலா நிலைக்குச் சென்றனர்.
சில கம்ப்யூட்டர்களில், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், ஹார்ட் டிஸ்க் சோதனையை இந்த பைல் இயக்கம் மேற் கொண்டது. இதனால், வேறு எந்தப் பணியினையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த பிரச்னையின் அடிப்படைத் தன்மையை யாராலும் அறிய இயலவில்லை. விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படை இயக்க குறியீடுகளை இந்த பேட்ச் பைல் குறுக்கிட்டு, இயக்கத்தின் தன்மையையே மாற்றியது.
இதனால், பல கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல் தன்மையும் மாறியது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மைக்ரோசாப்ட் எச்சரிக்கையை உடனே வெளியிட்டது.
ஆனாலும், மைக்ரோசாப்ட் வல்லுநர்களாலேயே இந்தப் பிரச்னையின் மூலத்தை அறிய முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கான முழு தீர்வினையும் தர இயலவில்லை.
இது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://support.microsoft.com/kb/2839011 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகலாம்.
0 comments :
Post a Comment