பேஸ்புக்-ல் இனி வர இருப்பவை


புயல் வேகத்தில் சென்று இருப்பவற்றை உடைத்தெறி'' என்ற வாசகம் பேஸ்புக் நிறுவன வளாகத்தில் பெரிய அளவில் ஒட்டப்பட்டு, அதன் செயல்வேகத்தினைக் காட்டுவதாய் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு 500 கோடி டாலர் வருமானம், நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 6,000 கோடி டாலர் என பேஸ்புக் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இதனுடைய பொறியாளர்கள், பல மாற்றங்களையும் வசதிகளையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் ஆண்டில், ஒரு புதிய விளம்பர நெட்வொர்க்கினை அமைத்து, உங்கள் பொருட்களை விற்பனை செய்திட, தொலைபேசி மூலமாக வாடிக்கையாளர்களை அணுகும் அமைப்பை உருவாக்க இருக்கின்றனர். 

மொபைல் சாதனங்களில் பேஸ்புக் இயக்கத்தின் வழி, இனி விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வரும். நீங்கள் இருக்கும் இடம் அறிந்து, உங்களுக்கு அருகே உள்ள விடுதிகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மருத்துவ மனைகள் மற்றும் நாம் செல்ல விரும்பும் இடங்கள் குறித்து, நாம் கேட்காமலேயே தகவல்கள் தரப்படும். 

“Nearby” என்ற இதன் தொழில் நுட்ப வசதி மூலம் இவை கிடைக்கும். இந்த வசதி, ஐ.ஓ.எஸ். இயங்கும் ஆப்பிள் மொபைல் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட சாதனங்களில் இயங்கும் வகையில் அண்மையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. 

வாடிக்கையாளர்கள், அவ்வப்போது அளிக்கும் தகவல்கள் அடிப்படையில், பேஸ்புக் அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்கிறது. ஆனால், பெரிய அளவில் இயங்க அவை போதாது. 

எனவே, தரவரிசைத் தகவலைப் பெறும் Yelp போன்ற நிறுவனச் செயல்பாடுகளை பேஸ்புக் மேற்கொள்ளும். இந்த நிறுவனத்தையே பேஸ்புக் வாங்கி, தன்னுடன் இணைத்துக் கொள்ளலாம். 

மேலும் இந்த வகை தகவல்கள், பேஸ்புக் தற்போது தீவிரம் காட்டி வரும் தேடல் சாதனத்திற்கும் ஓர் அடிப்படையை அமைக்கும். பேஸ்புக் நிறுவனர் ஸுக்கர் பர்க், தன் குழுவினர் சர்ச் இஞ்சின் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் அறிவித்திருந்தார். 

கூகுள் நிறுவனத்தின் AdSense போல, ஒரு விளம்பர நெட்வொர்க்கினை பேஸ்புக் அமைக்க இருக்கிறது. இது பேஸ்புக் தரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், தனித்தே விளம்பரங்களைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரிவினை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் பேஸ்புக் ஈடுபடும் எனத் தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்த விளம்பர நெட்வொர்க் பெரிய இடம் ஒன்றைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவாக Facebook Gifts வளர இருக்கிறது. இது அமேஸான் டாட் காம் அல்லது வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக, தொடக்கத்தில் இருக்காது. 

ஆனாலும், இந்த வகையில் சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்களுக்குப் போட்டியாகவே இருக்கும்.வருங்காலத்தில், பெரிய நிறுவனங்களையும் சவாலுக்கு அழைக்கலாம். 

மொபைல் சாதனங்கள் வழியாக பரிசுப் பொருட்களை ஆர்டர் செய்திடும் வசதி, பன்னாட்டளவில் விரிவாக்கம் என பேஸ்புக் இந்த வர்த்தகத்தினை மிகவும் முக்கியமான ஒன்றாக எடுத்துள்ளது. 2013ல் நிச்சயம் இதில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes