ஆப்பிள் நிறுவனமாவது, விலை மலிவாக போன் தருவதாவது? என்ன ஜோக்கா? என்று நம் மனதில் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணத் தோன்றும்.
ஆனால், நமக்குக் கிடைக்க இருக்கும் தகவல்கள் இது உண்மையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளன என உறுதிப்படுத்துகின்றன.
இன்று, மொபைல் போன் சந்தையில் மிகக் குறைவான விற்பனைப் பங்கினையே ஆப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டுமே இதன் விற்பனை ஓங்கியுள்ளது.
மற்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனப் போன்களின் பங்கு மிக மிகக் குறைவே. எனவே, வளர்ந்து வரும் நாடுகளில், தன் போன்களை விற்பனை செய்திட, ஆப்பிள் நிறுவனம், குறைந்த விலையில் ஐ போன்களைத் தயாரித்து விற்பனை செய்திடத் திட்டமிடுகிறது.
2013 ஆம் ஆண்டு முடிவிற்குள் வர இருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 100 டாலரிலிருந்து 149 டாலருக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தி போன்களை வெளியிடும் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்புள்ளது. தற்போது 75% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும், 15% ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டமும் பயன்படுத்தப்படுகிறது.
புதிய விலை குறைவான போனை சீனாவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிடுகிறது. ஐபோன் 5 எஸ் வெளியான வாரத்தில், சீனாவில் விற்பனை ஒரே வாரத்தில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது.
பொதுவாக, தன் புதிய போன்களை அறிமுகப்படுத்துகையில், தன் பழைய மாடல் போன்களின் விலையைக் குறைத்து, தன் போன்களின் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், இது சரியாகச் செயல்படாததால், ஆப்பிள் புதிய, விலை குறைவான ஐபோன்களை வெளியிட திட்டமிடுகிறது.
வர இருக்கும் புதிய, விலை குறைந்த போனில், அதன் டிஜிட்டல் பகுதிகள் குறைவான விலையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். தற்போதைய மாடல்களைக் காட்டிலும் சிறியதாக இருக்கலாம்.
இதே நேரத்தில் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் இசைவாக இயங்கும் வகையில் மொபைல் போன் ஒன்றைத் தயாரிக்கவும் ஆப்பிள் திட்டமிடுகிறது.
இதுவரை உலக அளவில், 27 கோடி ஐ போன்களை ஆப்பிள் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 8,050 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த வருமானம், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50% ஆக இருந்தது.
0 comments :
Post a Comment