கூகுள் அடுத்து என்ன?


கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம்.

இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பத்தாண்டு செயல்பட்ட பின்னர், கூகுள் ஆண்டு வருமானம் 2,000 கோடி டாலர். 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் 6,000 கோடி டாலர். தன் பத்தாவது ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் 14 கோடி டாலர் மட்டுமே. கூகுள் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 14,200 கோடி டாலர். மைக்ரோசாப்ட் நிறுவன மதிப்பு 24,100 கோடி டாலர். (ஆதாரம் www.nytimes.com).

கூகுள் நிறுவனத்தின் அலுவலர் எண்ணிக்கை ஏறத்தாழ 20,000. மைக்ரோசாப்ட் நிறுவனம் 90,000 அலுவலர்களைக் கொண்டுள்ளது. சராசரியாக, கூகுள் நிறுவன ஊழியர் ஒருவர் தன் நிறுவனத்திற்கு 10 லட்சம் டாலர் சம்பாதித்து தருகிறார். மைக்ரோசாப்ட் ஊழியர் 67,200 டாலர் ஈட்டித் தருகிறார்.

தேடல் சாதனத்தினைப் பொறுத்தவரை, கூகுள், சென்ற ஜூலை மாதத்தில் 4,800 கோடி தேடல்களைக் கொண்டிருந்தது. மைக்ரோசாப்ட் 230 கோடி தேடல்களைப் பெற்றது. ஒரு மணி நேரத்தில், கூகுள் கொண்டது 6 கோடியே 50 லட்சம் தேடல்கள். மைக்ரோசாப்ட் 31 லட்சம் தேடல்கள். 

அடுத்த ஆண்டு இதே நேரத்தில், கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதன வர்த்தகம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் வர்த்தகத்தினைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மைக்ரோசாப்ட் விண்டோஸ் வர்த்தகம் தான், தொழில் நுட்ப உலகின் மிகப் பெரிய வர்த்தகப் பிரிவாகக் கருதப்பட்டு வருகிறது. 

கூகுள் இந்த பதிவினை முறியடிக்கும் காலம் விரைவில் வரும் எனலாம். விண்டோஸ் மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் வர்த்தகம் இரண்டைக் காட்டிலும் அதிகமான மதிப்பில், கூகுள் வர்த்தகம் உயரும். (ஆதாரம்: alleyinsider.com)

அப்ளிகேஷன் சாப்ட்வேர் பிரிவைப் பொறுத்த வரை, கூகுள் யானைக்கு முன் உள்ள அணில் குஞ்சு தான். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் சாப்ட்வேர் விற்பனை, சென்ற ஆண்டு 1,200 கோடி டாலர் மதிப்பில் இருந்தது. கூகுள் அப்ளிகேஷன் தொகுப்புகள் 40 லட்சம் டாலர் அளவிலேயே இருந்தது. 

ஆனால், கூகுள் அறிமுகப்படுத்திய சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மிக மிக அதிகமாகும். தொடர்ந்து பல்வேறு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, கூகுள் அளித்துக் கொண்டே இருந்தது, இருக்கின்றது.(cnn.com)

இருப்பினும், தன் 11 ஆவது வயதில், கூகுள் மிகப் பிரம்மாண்டமான ஒரு சக்தியாய், தகவல் தொழில் நுட்ப உலகிலும், வர்த்தகத்திலும் விசுவரூபம் எடுத்துள்ளது. ஆனால், வரும் பத்து ஆண்டுகள், இணையம் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு சவாலாய் இருக்கும். அமெரிக்க இணையப் பயனாளர்களைக் காட்டிலும், வளரும் நாடுகளின் பயனாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கேற்ப தன் செயல்பாடுகளை கூகுள் அமைத்துக் கொள்ள வேண்டும். 

தற்போதைக்கு சீனா தான், கூகுள் நிறுவனத்திற்கு பெரிய சவாலாய் உள்ளது. சீனாவின் இணைய தேடல் தளங்களான TenCent, Baidu, மற்றும் Sina ஆகியவையே சீன பயனாளர்கள் நாடும் தளங்களாக உள்ளன. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ பயன்பாட்டின் மொத்தமும் இதற்கு இணையாகாது. 

அதே போல இந்த சீன தேடல் தளங்களும் பலருக்கு தெரியாமலேயே இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க மக்களிடம் கேட்டால், இவை என்ன சீன பீட்ஸாவா என்றுதான் கேட்பார்கள். இருக்கட்டுமே! கூகுள் தளத்தினை பத்து ஆண்டுகளுக்கு முன் யாருமே அறியாமல் தானே இருந்தார்கள். 

சீன தேடல் தளங்கள், பன்னாட்டளவில் பரவத் தொடங்கினால், கூகுள் சற்று சிரமப்பட வேண்டியதிருக்கும். ஆனால், கூகுள் தனக்குப் போட்டியாக வரும் எந்த பிரிவினையும் சமாளிக்கும் வகையிலேயே தன்னை வளர்த்து வருகிறது என்பதுதான் உண்மை.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes