ஐ போனில் கூகுள் மேப்ஸ்


ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் Apple’s iOS 6 Maps வழங்கிய பின்னர், பல்வேறு பிரச்னைகளையும், வாடிக்கையாளர்களிடமிருந்து மோசமான பின்னூட்டுக்களையும் பெற்றது. இந்த பிரச்னையிலிருந்து, ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றும் வகையில், தன் கூகுள் மேப்ஸ் வசதியை கூகுள் மீண்டும் அளித்துள்ளது. 

இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் அதன் பின்னர் வந்த ஐ.ஓ.எஸ். சிஸ்டங்கள் கொண்ட ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், இதனைப் பெற்றுக் கொள்ளலாம். 

கூகுள் மேப்ஸ் சாதனத்தின் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன. மேப்பில் ஒவ்வொரு திருப்பத்திற்குமான குறிப்பு தருதல், தெருத் தோற்றத்தினைக் காட்டுதல், அருகே உள்ள இடங்கள் குறித்த தேடல் தகவல்கள் உட்பட, கூகுள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமான அனைத்து வசதிகளும், இதில் கிடைக்கின்றன. 

தன்னுடைய செய்தி தகவல் வலைமனையில், கூகுள் நிறுவனம், தன் மேப்ஸ் சாப்ட்வேர் எவ்வாறு மிகவும் துல்லியமாக இடங்களைக் காட்டுகிறது என அறிவித்துள்ளது. தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான எண்ணிக்கையில் அப்டேட் அமைக்கப்படுகின்றன. 

கூகுள் மேப்ஸ் பார்க்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், பயன்படுத்தும் சாதனத்தை ஒரு குலுக்கல் குலுக்கிவிட்டு, உடனடியாகக் காட்டப்படும் படிவம் மூலம், பிழைச் செய்தியினை அனுப்பலாம் என, கூகுள் அறிவித்துள்ளது. 

ஐ போனுக்குக் கிடைக்கக் கூடிய இலவச அப்ளிகேஷன்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அப்ளிகேஷன் கூகுள் மேப்ஸ் ஆகும். வெளியான சில நாட்களிலேயே முதல் இடத்தினைப் பிடித்தது கூகுள் மேப்ஸ். 

கூகுள் மேப்ஸ் குறித்த பின்னூட்டுக் கருத்துக்கள், சில மணி நேரங்களி லேயே 8,000 என்ற எண்ணிக்கையை எட்டின. அனைத்துமே, ஐந்து நட்சத்திர தகுதியை கூகுள் மேம்ப்ஸ் வசதிக்கு அளித்திருந்தன. 

ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தின் தரமான செயல் தன்மையினை குகூள் மேப்ஸ் வசதியிலும் பார்க்கலாம். நமக்குத் தேவையான இடம் குறித்த தகவல்களுக்கான கேள்வியை டைப் செய்தோ, குரல் மூலம் பேசியோ பெறலாம். 

குறிப்பிட்ட முகவரி, இடம், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் இடம் குறித்து தெளிவாகத் தகவல்கள் கிடைக்கின்றன. நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்களா, வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களா, வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறீர்களா எனக் குறிப்பிட்டு, அதற்கேற்ற வகையில் பதில் பெறலாம்.

ஐபேட் சாதனத்திற்கென தனியே கூகுள் மேப்ஸ் வெளியிடப்படவில்லை. ஆப்பிள் சாதனங்களுக்கென வெளியிடப் பட்டுள்ளவற்றையே இதிலும் பயன்படுத்தலாம். தொடக்கத்தில், ஆப்பிள் தன் போன்களுடன், கூகுள் மேப்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினையும் இணைந்தே தந்து வந்தது. 

பின்னர், தானும் மேப்ஸ் தயாரிக்க முடியும் என்று காட்ட, ஆப்பிள் மேப்ஸ் தொகுப்பினை உருவாக்கத் தொடங்கியது. சென்ற செப்டம்பரில், ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென தனியே மேப்ஸ் வசதி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரித்து வெளியிட்டவுடன், கூகுள் மேப்ஸை தன் ஸ்டோரிலிருந்து தூக்கி வெளியேற்றியது.

ஆனால், ஆப்பிள் தந்த மேப்ஸ் சாப்ட்வேர் எவ்வளவு தவறான தகவல்களைக் காட்டுகின்றன என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியவுடன், ஆப்பிள் தன் தவறினை உணர்ந்தது. மேப்ஸ் தவறான தகவல்களைத் தருவதால், பலர் குழப்பத்திற்கு ஆளாகின்றனர் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினர். எனவே தன் மேப்ஸ் வசதியை, ஆப்பிள் வாபஸ் பெற்றது. 

மக்களிடம் இதன் தலைமை நிர்வாகி டிம் குக் மன்னிப்பு கேட்டார். இப்போது கூகுள், ஐபோனுக்கான மேப்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினைச் சீர் செய்து அளித்ததன் மூலம், இதன் உதவிக்கு வந்துள்ளது. இப்போது, ஐபோன், ஐபாட் டச் 4ஜி, ஐ.ஓ.எஸ்.5 மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டங்களுக்கான கூகுள் மேப்ஸ் கிடைக்கிறது. 40 நாடுகளில், 29 மொழிகளில் இந்த மேப்ஸ் கிடைக்கிறது. இவற்றில் ஆங்கிலம், சீனம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிஷ், டச் மற்றும் ஸ்பேனிஷ் ஆகியவை அடங்கும். 

மேப்ஸ் சாப்ட்வேர் பிரச்னையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு, ஆப்பிள் நிறுவனம், அதன் சாப்ட்வேர் பிரிவின் தலைமை அதிகாரியை, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் கடிதத்தில் கையெழுத்திட்டு வெளியிடக் கேட்டது. மறுத்த அவரை, உடன் வெளியேற்றியது. 

இருந்தாலும், மேப்ஸ் விஷயத்தில் ஆப்பிள் தன் மூக்கை உடைத்துக் கொண்டது கொண்டதுதான்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes