கடந்து போன 2012 ஆம் ஆண்டினைத் திரும்பிப் பார்த்தால், எத்தனை டிஜிட்டல் அதிசயங்கள் நடந்தேறி இருந்தன என்ற வியப்பு நம்மை நிச்சயம் சூழ்ந்து கொள்ளும்.
இவற்றில் அதிக அதிசயத்தைத் தந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் தான். அதன் வியத்தகு செயல்பாடுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, 2012 ஆம் ஆண்டு, அதன் சாதனைகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடையும் ஆண்டாகவே அமைந்தது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முற்றிலும் புதிய முறையில் வடிவமைத்து, யாரும் எதிர்பாராத வகையில் வசதிகளைக் கொண்டதாக விண்டோஸ் 8 தொகுப்பினை வழங்கியது. பயனாளர்களுக்கான யூசர் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் வியப்பினையும், வேகச் செயல்பாட்டினையும் வழங்கியது.
குறிப்பாக அதன் தொடுதிரை இயக்கம், நாம் அனைவரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தன் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் வழங்கி, டிஜிட்டல் பாதையில், இன்னும் ஒரு வெற்றி மைல்கல்லினை மைக்ரோசாப்ட் அமைத்தது.
விண்டோஸ் ஆர்.டி. என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏ.ஆர்.எம். கட்டமைப்பிலும் இயங்கி, இரு வேறு வகையான சாதனங்களிடையே ஒருங்கிணைப்பினைத் தந்தது.
அடுத்ததாக, விண்டோஸ் போன் 8 மொபைல் சாதனத்தினையும் மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. பல புதிய வசதிகள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல புதிய கூடுதல் வசதிகளை அமைப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த போன் தந்தது.
இதன் அமைப்பிற்கேற்ப, வடிவைக்கப்பட்ட நோக்கியா லூமியா 920 மற்றும் எச்.டி.சி. 8 எக்ஸ் மொபைல் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை ஆகி, மக்களின் வரவேற்பை உறுதி செய்து வருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மக்கள் பதிப்பாகிய, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புதிய தொகுப்பும் 2012ல் வெளியானது. இது இன்னும் விற்பனைச் சந்தைக்கு வரவில்லை என்றாலும், பயனாளர்கள் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
பல லட்சக்கணக்கானவர்கள் இதனைப் பயன்படுத்தி, இதில் இன்னும் மேற்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆபீஸ் தொகுப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வரும் மற்ற தொகுப்புகளுடன் எளிதில் இணைந்து செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும், அனைவரும் எளிதில் பெற்று பயன்படுத்தும் வகையில், இதன் உரிமம் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் ஹார்ட்வேர் பிரிவிலும் சிறப்பாக இயங்க முடியும் என்பதனை 2012ல், சர்பேஸ் ஆர்.டி. என்னும் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ஒரு சாப்ட்வேர் நிறுவனமாகத் தன்னை
முன்னிறுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட், டிஜிட்டல் உலகில் சேவை மற்றும் ஹார்ட்வேர் நிறுவனமாகவும் இந்த ஆண்டில் தடம் பதித்துள்ளது.
சர்பேஸ் ஆர்.டி. என்னும் இந்த டேப்ளட் பிசியின் செயல்பாடுகள், முற்றிலும் புதிய முறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளன. இதன் மிகச் சிறந்த வடிவமைப்பு இன்னும் பலரை வியக்க வைக்கிறது.
மிக மிகக் குறைவான அளவில் தடிமன் கொண்ட இதன் கீ போர்டு, இதுவரை டிஜிட்டல் உலகம் பெற்றிராத ஒன்று. அது மட்டுமின்றி, அதனை விலக்கி, டேப்ளட் பிசிக்கான பாதுகாப்பு மேல் மூடியாகவும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தான் ஏற்கனவே வழங்கி வரும் சேவைகளிலும் பல புதிய திருப்பங்களை மைக்ரோசாப்ட் 2012ல் ஏற்படுத்தியது.
அதில் முதன்மையானது ஸ்கை ட்ரைவ். இதில் பல்வேறு நுன்மையான வசதிகளை ஏற்படுத்தி, மேம்படுத்தி, சிறந்த க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவாக ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அதன் மற்ற சேவைகளுடன் இதனை முற்றிலுமாக ஒருங்கிணைத்துத் தன் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான, முழுமையான சேவை வசதிகளைத் தந்தது. அடுத்ததாக, மிக நம்பிக்கை வைத்து, கூடுதல் வசதிகளைக் கொண்டதாக அளித்த சேவை எக்ஸ்பாக்ஸ் மியூசிக் சாதனமாகும்.
இசையைப் பொறுத்த வரை, தன் முடிவான ஒரு சாதனமாக இதனை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இன்டர்நெட்டில் இசைக் கோப்புகளை ஒருங்கிணைக்க எளியதாகவும், அதிக திறனுடன் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது.
ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்குத் தேவையானதை, தாங்கள் விரும்புவதனை இன்டர்நெட் வழியே பெற இது வழி செய்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஆண்டில் தந்த புதிய சேவையாக அதன் அவுட்லுக் டாட் காம் சேவையைக் கூறலாம்.
இது இறுதியான சேவையாக இருந்தாலும், புதியதாகப் பல மாற்றங்களைக் கொண்டதாக இதனை மைக்ரோசாப்ட் புதுப்பித்து வழங்கியது. தன் ஹாட்மெயில் தளத்தினை முற்றிலுமாக நீக்கிவிட்டு, தொடக்கத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் மின்னஞ்சல் சேவைத் தளத்தை மாற்றி அமைத்துள்ளது.
புதியதாகவும், பயன்படுத்த எளியதாகவும், கூடுதல் பாதுகாப்பு கொண்டதாகவும் அமைத்துத்தரப்பட்ட இந்த மின்னஞ்சல் சேவைக்கு, மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அளவில் வரவேற்பினைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து சாப்ட்வேர் பிரிவில் மன்னனாக இயங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, 2012 ஆம் ஆண்டு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிலான ஆண்டாக இருக்கும்.
கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் மொபைல் பிரிவிலும் சாதனங்களைக் கொண்டு வந்த இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் முக்கிய சாதனைக் கற்களைப் பதித்த ஆண்டாகும்.
0 comments :
Post a Comment