தற்போது இன்டர்நெட் இணைப்பிற்கான முகவரிகள் ஐ.பி.வி. 4(Internet Protocol version 4) என்ற கட்டமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அமைப்பின் அடிப்படையில் எவ்வளவு முகவரிகள் வழங்கப்பட முடியுமோ, அந்த அளவு விரைவில் எட்டப்பட்டு விடும் அபாயம் ஏற்படப் போகிறது.
எனவே பன்னாட்டளவில் ஐ.பி.வி. 6(Internet Protocol version 6) என்பதன் அடிப்படையில் முகவரிகள் வழங்க வேண்டும் என அனைத்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன. ஐ.பி.வி.4 கட்டமைப்பு 32 பிட் அளவில் இயங்கக் கூடியது. புதிய அமைப்பு 128 பிட் அமைப்பில் இயங்கக் கூடியது. எனவே வழங்கப்படக் கூடிய முகவரிகளின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாக இருக்கும்.
புதிய அமைப்பிற்கு வரும் மார்ச் 2012 முதல் மாற வேண்டும் என இந்திய அரசு முடிவெடுத்து, அதற்கான ஆணையினை அனைத்து இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. 3ஜி இணைப்புகள் வழங்கப்படுவதால், டேட்டா கையாளும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒரு முகவரி வழங்கப்பட வேண்டியதிருக்கும். எனவே தான் இந்த நெருக்கடியும் ஏற்பாடும்.
இது குறித்து ஐ.எஸ்.பி. நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், அனைத்து இந்திய நிறுவனங்களும் ஐ.பி.வி. 6 முறைக்குத் தயாராய் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.
1. அதிக எண்ணிக்கையில் முகவரிகள்:
ஐ.பி.வி. 4 அமைப்பு 32 பிட் அமைப்பில் இயங்குவதால், இதன் மூலம் ஏறத்தாழ 430 கோடி இன்டர்நெட் முகவரிகள் மட்டுமே வழங்க முடியும். சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், நோட்புக் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள். டேப்ளட் கம்ப்யூட்டர்கள் என்ற வகையில் இன்னும் பல இணைய நெட்வொர்க்கில் இணையும் சாதனங்களுக்கு முகவரிகள் தர வேண்டியுள்ளது.
எனவே ஐ.பி.வி. 6 தேவைப்படுகிறது. இந்த அமைப்பு 128 பிட் கட்டமைப்பில் செயல்படுவதால், இன்றைய தேவைக்கும் மேலாக மிகப் பெரிய எண்ணிக்கையில், தனி அடையாளம் கொண்ட முகவரிகளைத் தர முடியும். இந்த பூமியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் தரும் வகையில் முகவரிகளைத் தர இயலும்.
2. இணைவாக இயங்கும் தன்மை:
ஐ.பி.வி. 6 கட்டமைப்பு, ஐ.பி.வி. 4 அமைப்புடன் இணைந்து இயங்கும் தன்மையுடையது. இதனால் பலவகை நெட்வொர்க்குகள், ஹார்ட்வேர் தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு அமைப்பில் தரப்பட்ட முகவரிகளால் கலக்கம் அடைய வேண்டியதில்லை.
3. போதுமான பாதுகாப்பு:
ஐ.பி.வி. 6 கட்டமைப்பு தனி என்கிரிப்ஷன் வழிமுறையைப் பயன்படுத்தும். எனவே இதன் மூலம் அனுப்பப்படும் டேட்டா பாக்கெட்டுகள் பத்திரமான முறையில், மற்றவர்களால் பயன்படுத்த இயலாத வகையில் இணைய வெளியில் பயணம் செய்திட முடியும்.
4. சிறப்பான இயங்கு தன்மை:
ஐ.பி. பாக்கெட் எனப்படும் தகவல்கள் அனுப்பப்படும் தொகுதி களுக்கான ஹெடர்களில், ஐ.பி.வி.6 அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த தகவல் பாக்கெட்களைக் கையாள்வதில் திறன் அதிகப்படுத்தப்பட்டு, நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. மேலும் இடையே தகவல் பாக்கெட்கள் காணாமல் போவது குறைகிறது. நம்பிக்கையான, திறமையான தகவல் பாக்கெட் பயணம் தரப்படுகிறது.
0 comments :
Post a Comment