உலக அளவில் புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வெளியிடப்படுகையில், முன்னணி நிறுவனங்கள், அமெரிக்கா, தைவான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், நோக்கியா நிறுவனம், தன் ஆஷா 501 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இந்தியாவின் தலைநகரைத் தேர்ந்தெடுத்து சென்ற வாரம், டில்லியில், அதனை ஒரு விழாவாக நடத்தியது.
இந்த போனை வடிவமைக்க இந்தியா தான் அடிப்படையாக இருந்தது என்று இவ்விழாவில் நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஈலாப் தெரிவித்தார். மொபைல் போன் பயன்பாட்டில் பல மாடல்களை உருவாக்க இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களே அடிப்படையாக அமைந்துள்ளன என்றும் கூறினார்.
"ஆஷா' என்ற இந்தி சொல்லுக்கு நம்பிக்கை என்று பொருள். சரிந்து வரும் தன் விற்பனைச் சந்தைப் பங்கினை, ஆஷா வரிசை போன்கள் வழியாகக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் நோக்கியா இறங்கியுள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில், இரண்டு கோடி போன்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என இவ்விழாவில் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் கொண்ட போனிலிருந்து, அடுத்த நிலையில், இன்டர்நெட் உட்பட சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் தற்போது நாடுகின்றனர். ஸ்மார்ட் போன் வகைகளை அறிமுகப்படுத்த தவறியதால் தான், நோக்கியா தன் 14 ஆண்டுகால முதல் இடத்தினை சாம்சங் வசம் இழந்தது. இதனை இலக்காகக் கொண்டே, சாம்சங் தன் ரெக்ஸ் வரிசை போன்களை அண்மையில் வெளியிட்டு வெற்றியும் பெற்றது.
அதே போல, நோக்கியாவும் தன் ஆஷா வரிசை போன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய போனில், டச் ஸ்கிரீன் இயக்கமும், பிரபலமான சமூக வலைத் தளங்களுக்கான அப்ளிகேஷன்களும் தரப்பட்டுள்ளன. இது ஒரு 2ஜி போன். வை-பி இயக்கம் கிடைக்கிறது.
இரண்டு சிம்களை இயக்குகிறது. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர் இதில் பதியப்பட்டுள்ளது. 4 ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி தரப்படுகிறது. இதன் சிப் செட் இயக்க வேகம் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்திற்கும் சற்று குறைவாகவே இருக்கும். இதன் கேமரா 3.2 எம்பி திறன் கொண்டதாக உள்ளது. இந்த போனின் விலை ரூ.5,300 என்ற அளவில் அமையும்.
இந்த மொபைல் போனின் சிறப்பு இதன் பேட்டரி. 48 நாட்களுக்கு இதில் சேமிக்கப்படும் மின்சக்தி தங்குகிறது. இதனைப் பயன்படுத்தி 17 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். மின் இணைப்பு அடிக்கடி பெறமுடியாமல் இருக்கும் இந்திய மக்களுக்கு இது ஒரு சிறப்பு வசதி எனக் கொள்ளலாம்.
ஜூன் மாதம் முதல் இது கடைகளில் கிடைக்கும். 90 நாடுகளில், 60 மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்த போன் விற்பனை செய்யப்படும்.
1 comments :
superb!
Post a Comment