பேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்


சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். 

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. 

இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. 

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது. 

தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at May 29, 2013 at 2:43 PM said...

என்னவெல்லாம் செய்றாங்க... நல்லதொரு எச்சரிக்கை தகவலுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes