விண்டோஸ் சந்திக்கும் வேகத்தடைகள்


விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். 

அதற்கு முன்னர் இருந்த, டாஸ் இயக்க முறை, ஒரு வேளையில், ஒரு செயலை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற வகையில் செயல்பட்டது. கிராபிகல் இடைமுகத்தின் உதவியுடன் இந்த பல்முனை செயல்பாடு சாத்தியமாயிற்று. 

எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது. அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது. 

இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது. 

இந்த சாதனங்கள் விலக்கப்படும்போது, பயன்படுத்த முடியாத பல பைல்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விட்டுச் செல்லப்படுகின்றன. இப்படியே பல பைல்கள் தொடர்ந்து தங்குவதால், காலப் போக்கில் புரோகிராம்களும் சாதனங்களும் செயல்படுவதற்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. 

இதனால், விண்டோஸ் சிஸ்டத்தின் செயல்வேகம் மந்தப்படுத்தப் படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால், டேட்டாவினை ஸ்டோர் செய்வதிலும், பைல்களை நீக்குவதிலும் நாம் சில வழிமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.


1. டிஸ்க் இடம் சிதறல்:

டிஸ்க்கில் பைல் ஒன்று எழுதப்படுகையில், அதன் முன்போ, பின்புறமோ இடம் விடப்படாமல், தொடர்ந்து எழுதப்படுகிறது. அது நீக்கப்படுகையில், முதல் நிலையில், அந்த பைல் அழிக்கப்படாமல், அந்த இடத்தில் வேறு பைலை எழுதிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தரப்படுகிறது. 

வேறு ஒரு பைலை அதில் எழுதுகையில், பைலுக்கான இடம் போதுமானதாக இல்லை என்றால், மீதப் பைல் வேறு ஒரு இடத்தில் எழுதப்படுகிறது. பைலின் ஒரு பகுதி வேறு இடத்தில் இருப்பதனை, முதல் பகுதியின் இறுதியில் எழுதி வைக்கப்படுகிறது. என்.டி.எப்.எஸ். பைல் சிஸ்டம், இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வினைக் கண்டது. 

தொடர்ந்து இடம் இருந்தால், அந்த இடத்திலேயே எழுதும் வகையில் இந்த சிஸ்டம் அமைக்கப்பட்டது. இருப்பினும், பலவகை பார்மட்களிலும், அளவுகளிலும் பைல்கள் உருவானதால், இந்தப் பிரச்னை தொடர்கிறது. ஒரு பைல் பல இடங்களில் எழுதப்படுவதால், பைல் படிக்கப்படும்போது, அதிக நேரத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டம் எடுத்துக் கொள்கிறது. 

நூல் ஒன்றில், கட்டுரை ஒன்று அதன் பல இடங்களில், தொடர்ச்சி, தொடர்ச்சி என அச்சிட்டிருந்தால், நமக்குப் படிக்க சிரமமாக இருக்கும் இல்லையா! அது போல் தான் இதுவும். (மேலும் தகவல்கள் அறிய பார்க்க: More information on disk fragmentation can be found in this excellent article from the MSDN Blog: Disk Defragmentation – Background and Engineering the Windows 7 Improvements)


2. சாப்ட்வேர் இயக்கமும் ராம் மெமரியும்:

ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இயக்கப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள், அமர்ந்து செயல்படும் இடமே ராம் மெமரி. இவற்றிற்கு அதிக இடம் தேவைப்படுகையில், இதன் இட அளவு மிகவும் குறைவாக இருப்பதே, பிரச்னைக்கு இடமாக அமைகிறது. 

சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றுக்கு, அதிக இடம் தேவைப்படுகையில், இதனை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் உள்ளதா என ஸ்கேன் செய்து, இல்லாத நிலையில், அந்த புரோகிராமினை ஸ்வாப் பைல் என்ற முறையில் ஹார்ட் டிஸ்க்கில் இயக்குவதற்காகப் பதிகிறது. 

இது போல வெளியில் புரோகிராம்கள் எழுதப்படுவதனால், விண்டோஸ் அதிக நேரம் எடுத்து செயல்படத் தொடங்குகிறது. இது செயல் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. 


3. சிஸ்டம் ட்ரைவில் இடப்பற்றாக்குறை:

தற்காலிக டேட்டாவினை ஸ்டோர் செய்திட, விண்டோஸ் இயக்கத்திற்கு ஹார்ட் ட்ரைவில் இடம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைக்காத போது, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஒன்றுமே செயல்பட இயலாத நிலை ஏற்படுகிறது.


4. மால்வேர்:

Malicious Software என்பதன் சுருக்கமே மால்வேர் (Malware) ஆகும். வைரஸ், அட்வேர் அல்லது வோர்ம் என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களே மால்வேர் எனப்படும். இவை, நம் அனுமதியின்றி கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு, சிஸ்டத்தின் திறனைத் திருடிக் கொள்ளும். மற்ற சாப்ட்வேர் போலவே இவையும் இயங்குவதால், சிஸ்டத்தின் செயல்திறன் மட்டுப்படுத்தப்படும்; சில வேளைகளில் முடக்கப்படும்.


5. ஹார்ட்வேர் பிரச்னைகள்:

ஹார்ட்வேர் சாதனங்களினால், கிடைக்கும் பிரச்னைகளை இன்னதென நாம் உடனே அறியமுடியாது. ஹார்ட்வேரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது பல பிரிவுகளை இயக்கும் ட்ரைவர் புரோகிராம்களுக்கிடையே ஒத்திசைவு இல்லாத நிலை ஏற்படலாம். இவை ஏற்படும் என முன் கூட்டியே அறிய முடியாது. அறிந்து கொள்வதும் மிகக் கடினம். இவற்றிற்குக் காரணமான இரண்டினை இங்கு பார்க்கலாம்.


6. அதிக வெப்பம்:

சி.பி.யு, பவர் சப்ளை மற்றும் கிராபிக்ஸ் கார்ட்களை, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, கம்ப்யூட்டரில் சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை செயல்படாத நிலையில், உள்ளே உருவாகும் வெப்பம், கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கும்.


7. கிராபிக்ஸ் கார்ட்:

கிராபிக்ஸ் கார்ட் தனக்கான மெமரியை, ராம் மெமரியுடன் பகிர்ந்து கொள்ளும். எனவே, கிராபிக்ஸ் கார்டின் முழு திறனும் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை இயக்குகையில், ராம் மெமரி பாதிக்கப்பட்டு, செயல்வேகம் தடை படுகிறது. இதற்குத் தீர்வாக, தனக்கென மெமரி கொண்டுள்ள, கிராபிக்ஸ் கார்டினை இணைப்பதே சிறந்தது.

மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகள் தவிர, சிறிய அளவில் வேறு சிலவற்றாலும் பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் வேகம் தடை படலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்தால், பல தடைகளை நாம் வெற்றி கொள்ளலாம் என்பது உறுதி. இவற்றை வெற்றி கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்பதனை அடுத்த வாரங்களில் பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes