தன் வாடிக்கையாளர்களின் அடங்காத கோபத்தினைப் பார்த்த பின்னர்,மைக்ரோசாப்ட் தன் கொள்கையை அண்மையில் மாற்றிக் கொண்டது.
ஆபீஸ் 2013 தொகுப்பினை வாங்கியவர்கள், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே அதனை இன்ஸ்டால் செய்திட முடியும்.
அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் இயக்க முடியாத நிலைக்குப் பழுதாகிப் போனால், ஆபீஸ் தொகுப்பினை வேறு ஒரு கம்ப்யூட்டரில் நீங்கள் இன்ஸ்டால் செய்திட முடியாது.
மைக்ரோசாப்ட் இத்தகைய ஒரு திட்டத்தினை அறிவிக்க, அதன் வர்த்தக ரீதியான காரணம் ஒன்று இருந்தது. ஆபீஸ் தொகுப்பினை சந்தா (subscription) கட்டியும் பயன்படுத்தலாம்.
இந்த வகையில் ஆண்டு ஒன்றுக்கு 99 டாலர் செலுத்தினால் போதும். ஆபீஸ் 2013 தொகுப்பு, அது தரும் வசதிகளுக்கேற்ப, 140 டாலர் முதல் 400 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, தனக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில், மொத்தமாகச் செலுத்தி வாங்குபவர்கள், சந்தா கட்டிப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் இத்தகைய விதியை ஏற்படுத்தியது.
ஆனால், எம்.எஸ். ஆபீஸ் உரிமம், ஒரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே செல்லுபடியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது வாடிக்கையாளர்களை கோபம் கொள்ளச் செய்தது. பல நாடுகளிலிருந்து கண்டனக் கணைகள் பறந்தன.
இந்த எதிர்பாராத கோபத்தினைப் பார்த்ததும், மைக்ரோசாப்ட் தன் கொள்கை முடிவினை மாற்றிக் கொண்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட முடிவின்படி, ஒரு கம்ப்யூட்டருக்கு வாங்கப்பட்ட உரிமத்தினை, இன்னொருவரின் சம்மதத்துடன் அவரின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்களின் கம்ப்யூட்டர் இயங்க மறுத்தாலோ, அல்லது நீங்கள் புதிய கம்ப்யூட்டருக்கு மாறினாலோ, இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இதுவும் 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தான் அனுமதிக்கப்படும். ஆனால், ஹார்ட்வேர் பிரச்னையினால், மாறுதல் வேண்டி இருந்தால், இந்த 90 நாள் காலவரையறை தளர்த்தப்படும்.
இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment