ஹாட்மெயில் சகாப்தம் முடிகிறது




இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது. 

இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது. 

ஆனாலும், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில் முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது. 

தொடர்ந்து இயக்கியும் வருகிறது. ஆனால், தன் செயல் பாடுகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஹாட்மெயிலை மூடி, அதன் பல கோடி வாடிக்கையாளர்களை தன் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றும் முடிவை மைக்ரோசாப்ட் அறிவித்தது. 

அறிவிப்பிற்குப் பின்னரும் அவுட்லுக் இயங்கி வந்ததால், அதன் வாடிக்கையாளர்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். வரும் சில மாதங்களில் இதனை முழுமையாக அமல் படுத்தி, ஹாட் மெயில் தளத்தை மூட இருப்பதாக அண்மையில் மைக்ரோசாப்ட் அறிவித்தது. 

இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திடீரென ஹாட் மெயில் மூடப்படும் என்பதனைப் பலரால் மனதளவில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்படும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பயன்படுத்தினால், முற்றிலும் புதிய அனுபவம் காத்திருக்கிறது. 

அவுட்லுக் டாட் காம் தளத்திலேயே பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய இன்டர்பேஸ் தரும் அனுபவம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இந்த மாற்றத்திற்கான வழி காட்டுதலைச் சென்ற ஆண்டு முதலே மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. 

இருப்பினும், உலகெங்கும் உள்ள ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். அவற்றில் சிலவற்றையும், மைக்ரோசாப்ட் அவை குறித்து தந்த தகவல்களையும் இங்கு காணலாம்.

கேள்வி: எத்தனை முறை, மைக்ரோசாப்ட், ஹாட்மெயில் தளத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாறுவதற்கான அறிவிப்புகளைத் தந்தது? 

பதில்: பல மின்னஞ்சல்களை மிக விளக்க மாக, இது குறித்து, மைக்ரோசாப்ட் தந்தது. இதற்கென எவற்றையெல்லாம் அப்டேட் செய்திட வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கியது.


கேள்வி: நான் ஹாட்மெயில் அக்கவுண்ட்டிலிருந்து, அவுட்லுக் தளத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் மனது மாறி, ஹாட் மெயில் தளத்திற்கு வர முடியுமா?

பதில்: இன்றைய நிலையில் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். (அவுட்லுக் டாட் காம் சோதனை முறையில் இருந்த போது, மைக்ரோசாப்ட் இதனை அனுமதித்தது. ஆனால் இப்போது இல்லை.)


கேள்வி:அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு நான் மாறிவிட்டால், நான் ஹாட்மெயில் தளத்தில் சேர்த்து, சேமித்து வைத்த மெயில்கள் எல்லாம் என்னவாகும்?

பதில்: எல்லாமே அங்கு நகர்த்தப் பட்டுவிடும். அப்கிரேட் பட்டன் அழுத்திய சில நொடிகளில், உங்கள் மெயில்கள் அனைத் தும் புதிய தளத்தில் கிடைக்கத் தொடங்கி விடும். 


கேள்வி: எந்த பிரவுசர்கள் அவுட்லுக் டாட் காம் தளத்தினை சப்போர்ட் செய்கின்றன?

பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9,10, கூகுள் குரோம் 17 மற்றும் அடுத்த பதிப்புகள், பயர்பாக்ஸ் 10 மற்றும் அடுத்த பதிப்புகள், சபாரி 5.1 மற்றும் மேக் சிஸ்டம். இவை அனைத்தின் முந்தைய பதிப்புகளிலும் அவுட்லுக் டாட் காம் செயல்படும். 


கேள்வி: என்னுடைய மைக்ரோசாப்ட் முகவரி, விண்டோஸ் லைவ் ஐ.டி., ஹாட் மெயிலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் கதி என்ன? புதிய மெயில் ஐ.டி. ஒன்று பெற்று, என் அக்கவுண்ட்ஸ் மாற்ற வேண்டுமா?

பதில்: தேவை இல்லை. நீங்கள் @hotmail.com, @msn.com or @live.com என எதனைப் பயன்படுத்தி வந்தாலும், ஹாட் மெயில் தளம் மூடப்பட்ட பின்னரும், அந்த மெயில் ஐ.டிக்களுடன் தொடர்ந்து செயல் படலாம். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல், எந்த மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையையும் மேற்கொள்ள முடியுமோ, அது போலத்தான். இதற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. மேலும், தற்போதைய அவுட்லுக் சேவை இன்னும் சிறப்பானதாக, வளமானதாக இருக்கும்.


கேள்வி: நான் ஏற்கனவே தனியாக அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டும் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்பட்டால், என் அக்கவுண்ட்களின் கதி என்னவாகும்? இரண்டும் இணைக்கப்படுமா? தனித்தனியாக இயங்குமா? ஒன்று அழிக்கப்படுமா?

பதில்: இரண்டையும் இணைக்க எந்த வழியும் இல்லை. ஆனால் இரண்டு அக்கவுண்ட்களையும் இயக்கி, இரண்டையும் நீங்களே இணைக்கலாம். இதற்கு, அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அதில் permissions என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், “manage linked accounts” என்பதில் கிளிக் செய்திடவும். 


கேள்வி: பயனாளர்கள், அவர்கள் விரும்பினால், தங்களுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்களா?

பதில்: பலர் தங்களின் மின்னஞ்சல் முகவரியுடன் அன்பால் ஒன்றிப் போய் இருக்கிறார்கள். அது மாற்றப்பட்டால், எங்கே தங்களுடைய அடையாளம் சிதறிவிடுமோ என அஞ்சுகிறார்கள். பலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு புதிய அவுட்லுக் டாட் காம் தளத்தில் புதிய முகவரியுடன் பழைய முகவரி சேவையை இணைத்துக் கொண்டனர். ஆனால், பழைய ஹாட்மெயில் முகவரியையே தொடர்ந்து பயன்படுத்த விரும்புபவர்கள் இன்னும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இருவகையினருக்கும் ஒரே மாதிரியான சேவை கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


கேள்வி: அவுட்லுக் டாட் காம் தளத்தில் உள்ள காலண்டரை எப்போது மைக்ரோசாப்ட் அப்டேட் செய்திடும்? இப்போது ஹாட்மெயில் ஸ்டைலில் இருக்கும் அதனை, மெட்ரோ ஸ்டைலுக்கு எப்போது மாற்றும்?

பதில்: மைக்ரோசாப்ட் இது குறித்து இன்னும் எதுவும் திட்டவட்டமாகச் சொல்ல வில்லை. விரைவில் இது நடந்தேறும் என்றுதான் அறிவிப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.


கேள்வி: அவுட்லுக் டாட் காம், ஸ்கைப் தளத்துடன் இணைக்கப்படுமா? 

பதில்: இதற்கு விரைவில் என்ற பதிலைத் தான் மைக்ரோசாப்ட் தந்து கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பிட்ட காலவரையறையைத் தரவில்லை.


கேள்வி: நான் என்னுடைய மொபைல் சாதனங்களை விண்டோஸ் 8, விண்டோஸ் போன், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களை அவுட்லுக் டாட் காம் தளம் பயன்படுத்தும் வகையில் மாற்றத்தினையும் செட்டிங்ஸையும் அமைக்கலாமா?

பதில்: தாராளமாக செட் செய்து கொள்ள லாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களுக்கு அமைக்க http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigurewindows8windowsphone143946 என்ற முகவரியில் உள்ள தளத்தில் வழிகள் காட்டப்பட்டுள்ளன. 

ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வழிமுறைகள் http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigureandroidios143977 என்ற முகவரியில் கிடைக்கின்றன.


1 comments :

அ. முஹம்மது நிஜாமுத்தீன் at March 10, 2013 at 7:33 PM said...

தகவல்களுக்கு நன்றி!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes