விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகியும், அனைவரும் எதிர்பார்த்த அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிலும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் மிகவும் குறைவான வேகத்திலேயே இந்த ஓ.எஸ். உள்ளது என்பது தெளிவாகி வருகிறது.
இது குறித்து நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடம் உள்ள இந்த மனப் பாங்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில், விண்டோஸ் 8 புதியதாக 0.4 சதவீத இடமே அதிகமாகப் பிடித்துள்ளது. 2.26 சதவீதத்திலிருந்து 2.67% ஆக உயர்ந்துள்ளது. விண்டோஸ் 7 வெளியான போது நான்கு மாதத்தில் 9% இடத்தைப் பிடித்திருந்தது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் மக்கள் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை மாற்றிக் கொள்கிறார்கள் என்ற பொதுவாகச் சொல்லப்படும். அவ்வாறெனில், விண்டோஸ் 8 க்கான மாற்றம் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடிக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
சென்ற பிப்ரவரி மாதக் கணக்கீட்டின்படி, விண்டோஸ் 7 - 44.55%, விண்டோஸ் எக்ஸ்பி - 38.99%, விஸ்டா - 5.17%, விண்டோஸ் 8 - 2.67%, மேக் ஓ.எஸ். மற்றும் பிற மீத பங்கினையும் கொண்டுள்ளன.
மேற்கு நாடுகளில் பல வகைகளில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சலுகை விலையில் தரப்பட்டும், மைக் ரோசாப்ட் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தங்கள் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ள முன்வர வில்லை. எனவே ஏதேனும் புதியதொரு விற்பனை நடவடிக்கையை மைக்ரோசாப்ட் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் ஸ்டோரில் தற்போது 44, 650 அப்ளிகேஷன்கள் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,000 அப்ளிகேஷன்கள் புதியதாக இடம் பெற்றன. இதே போல ஜனவரியிலும் 4,000 அப்ளிகேஷன்களே புதியதாக விண்டோஸ் ஸ்டோருக்கு வந்தன.
இவற்றில் பெரும்பாலானவை, அதிகப் பயனில்லாத அப்ளிகேஷன்களாகவும் உள்ளன. இந்த வேகத்தில் சென்றால், 2014 ஆம் ஆண்டுக்குள், அப்ளிகேஷன்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என்பது கனவாகவே இருந்திடும்.
விண்டோஸ் போன் பிரிவிலும் இதே மந்தநிலையே ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி பிரிவுகளில், விண்டோஸ் 8 பயன்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இடம் பிடிக்கவில்லை.
மைக்ரோசாப்ட் இதனை நன்கு உணர்ந்துள்ளது. இருப்பினும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதால், மாறிக் கொள்ளும் மக்கள், விண்டோஸ் 8க்கு மாற்றிக் கொள்வார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
0 comments :
Post a Comment