விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை

மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது.

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க் கின்றனர்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கம்ப்யூட்டரிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில், விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே, புதிய தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.

தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.


தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டாப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.

மேலும், தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.


விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல் பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. காப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.

விண்டோஸ் 8 தொகுப்பில், இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய பைல்கள், குறிப்பாக வீடீயோ மற்றும் போட்டோ பைல்களை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். பைல்கள் காப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.


விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் பைல்களைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ (Home, Share and View) ஆகும். இடது புறம் பைல் மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.

ஒரு பைலை அதன் டைரக்டரிக்கான வழியுடன் காப்பி செய்வதற்கு “Copy path” என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் பைல் ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் காப்பி செய்யப்படுகையில், பைலை அணுகுவது எளிதாகிறது.


ஷேர் என்னும் டேப்பின் கீழ் இமெயில் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.


புதிய பைல் மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க, ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.


இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 comments :

MoonramKonam Magazine Group at September 13, 2011 at 10:34 PM said...

அருமையாக புரியும்படி எழுதுகிறீர்கள்...!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes