இன்டர்நெட்டில் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது.

தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது.

இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும்.

IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன.

ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.

வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன.

வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.

அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.

விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes