தங்கம் விலை எகிறக் காரணம் என்ன?

ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000 ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.


"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்' என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.


இதுகுறித்து, ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.

இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.


தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.


ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.


20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.



தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.


அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.



மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.



சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது.


நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes