பெண்களை ஏமாற்றி மணந்து கொள்ளையடித்து கம்பி நீட்டும் நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகம்.
ஜீவனே நாயகன். வெளிநாட்டில் ஏமாற்றும் கதை...
கணவனாக வருபவன் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஹேமமாலினி. அவரை பின் தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி வீழ்த்துகிறார் ஜீவன். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது ஹேமமாலினி கழுத்தில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த ரொக்கப் பணத்தை சுருட்டி மாயமாகிறார்.
சினிமாவில் நடிக்கும் லட்சுமி ராய் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்க ஆர்வப்படுகிறார். அது தெரிந்து பெரிய தொழில் அதிபர் என்றும் அவரது தீவிர ரசிகர் என்றும் அறிமுகமாகிறார். பிறருடைய வீட்டையும் நிலத்தையும் தன்னுடையது என நம்ப வைத்து காதல் வலையில் சிக்கவைக்கிறார். தந்திரமாய் பேசி அவரிடம் இருந்து பல கோடிகளை கறந்து விட்டு மறைகிறார்.
மாடல் அழகி ஸ்வேதாமேனன் திருமணமான ஆண்களுக்கு வலை விரித்து பணத்தை கறப்பதுடன் அவர்களின் மனைவிமார்களிடமும் மாட்டி விடுகிறார். அவரிடமும் கோடீஸ்வரன் என சொல்லி வசியப்படுத்துகிறார். வீட்டில் புகுந்து நகை பணத்தை அள்ளி நழுவுகிறார்.
வெளிநாட்டு பெண் தாதா ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி என்ற பெயரில் பழகி வாலியின் தத்துவ கவிதைகளை தான் எழுதியதாக சொல்லி ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவன் போதனைகளில் மயங்கி அவர் பக்தையாக மாறுகிறார். தன்னிடம் இருந்து பணத்தையும் வழங்குகிறார். அந்த பணத்தை ஜீவன் என்ன செய்கிறார் என்பது சென்டிமெண்ட் கிளைமாக்ஸ்...
அப்பாவி வில்லத்தனத்தில் ஆரவாரப்படுத்தியுள்ளார் ஜீவன். கனிவான பேச்சு, புத்திசாலித்தன செய்கைகளால் பெண்களை வசிப்படுத்தும் சீன்கள் ரசனையானவை.
ஹேமமாலினியை மடக்க உங்கள் முகம் பார்த்து போனால் சம்பள உயர்வு, பதவி உயர்வெல்லாம் கிடைக்கிறது என்பதும் அவர் சொன்ன இடத்தில் விடிய விடிய உட்கார்ந்து இருப்பதும் ரகளை.
ஸ்வேதா மேனனை அலட்சியபடுத்துவதுபோல் விழவைத்து பணப்பெட்டியை வழித்தெடுத்து, மாயமாவது... லட்சுமிராயிடம் வேறொருவர் நிலத்தை காட்டி இங்கு உங்கள் பெயரில் ஸ்டூடியோ கட்டப்போகிறேன் என்று கூலாக சொல்வது... என உலக மகா மோசடித்தனத்தில் ஜொலிக்கிறார். கொள்ளைக்காரியாக வரும் ரக்ஷணாவிடம் கவிஞர் வாலி பாடல் வரிகளை மொழி பெயர்த்து சொல்லி சன்னியாசியாக மாற்றி சொத்துக்களை அபகரிப்பது வயிற்றை புண்ணாக்கும் காமெடி..
ஊனமுற்ற சங்கீதாவுக்கு உதவுவதன் மூலம் மனதில் இறங்குகிறார். இலங்கை பிரச்சினையோடு சங்கீதா கேரக்டரை இணைத்து இருப்பதும் பிரிந்த குழந்தையை அவரோடு சேர்த்து வைக்க ஜீவன் போராடுவதும் ஜீவன்... மற்ற நாயகிகளிடம் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
பெரிய நடிகை லட்சுமிராய் சுலபமாக ஏமாறுவது சினிமாத்தனம். வித்தியாசமான கதை களத்தில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் செல்வா
0 comments :
Post a Comment