பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் சலுகைகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பல சலுகைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. பல பயனுள்ள இணைய தளங்களை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதியினை வழங்குகின்றன. 

Internet.org என்ற அப்ளிகேஷன் மூலம், 30க்கும் மேற்பட்ட இணைய தளங்களை இலவசமாக அணுகிப் பயன்படுத்தலாம். செய்திகள், தாய்மை நலம், பயணங்கள், சுற்றுலா, வேலை வாய்ப்புகள், விளையாட்டு செய்திகள், தொலை தொடர்பு மற்றும் அரசு தகவல்களை எந்தவித 2ஜி அல்லது 3ஜி கட்டணம் இன்றிப் பெறலாம்.

தற்போது இணைய இணைப்பினைப் பெறாமல் அல்லது பெற முடியாமல் இருக்கும் 500 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பினை வழங்குவதைத் தன் இலக்காகக் கொண்டுள்ளதாக முன்பு பேஸ்புக் அறிவித்திருந்தது. 

அத்திட்டத்தின் ஒரு முயற்சியாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Internet.org என்னும் தன் அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது. 

இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை இணைய வசதியினை இலவசமாகப் பெறலாம். தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலம், குஜராத், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இது அறிமுகமாகியுள்ளது. 35க்கும் மேற்பட்ட இணைய சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த தளங்கள், இணைய அலைக்கற்றையில் குறைந்த அளவே பயன்படுத்துகின்றன. மேலும் மொபைல் போன்களுக்கேற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அடிப்படை பயன்களை வழங்கக் கூடிய இணைய தளங்களுக்கு இதன் மூலம் இலவச இணைய இணைப்பு கிடைக்கும். மற்றபடி பொதுவான, கட்டற்ற இணைய இணைப்பு வழங்கப்பட மாட்டாது. 

விக்கிபீடியா, வேலை வாய்ப்பு குறித்து தகவல் தரும் தளங்கள், சீதோஷ்ண நிலை குறித்து தகவல் தரும் தளங்கள், விளையாட்டு, செய்திகள் மற்றும் தன் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய தளங்களில் கிடைக்கும் சேவை இந்த இலவச இணைய இணைப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் இவை படிப்படியாக அமல்படுத்தப்படும். மேலும் பல இணையதளங்கள் இந்த இலவசப் பட்டியலில் இணைக்கப்பட்டு கூடுதல் பயன்கள் மக்களுக்குக் கிடைக்கும். 

இன்னும் 90 நாட்களில் இந்தியா முழுவதும் இந்த இலவச சேவை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் Internet.org Android என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் இந்த சேவைகளை அனுபவிக்கலாம். 

இது www.internet.org என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆப்பரா மினி பிரவுசரின் தொடக்க திரையிலேயே இந்த தளம் கிடைக்கிறது. அல்லது வாடிக்கையாளர்கள், இந்த சேவையைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளைப் பெற 180030025353 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பேசலாம். 

எந்தவிதமான இணைய இணைப்பிற்கான டேட்டா திட்டமும் இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் இதனைப் பெறலாம். இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கின்றன.

இந்த திட்டம் ஒவ்வொருவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை உலகில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது. 

இதற்கு முன் இது போன்ற இலவச இணைய திட்டத்தினை கொலம்பியா, ஸாம்பியா, கென்யா மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த இலவச சேவையைத் தொடங்கி வைத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குர்தீப் சிங் பேசுகையில், இதன் மூலம் இணைய இணைப்பில் செயல்படும் இந்தியக் குடி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும், இவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதனால், கல்வி, தகவல் தொடர்பு, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் செயல்பாடுகள் மக்களிடையே அதிகரித்து, அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்திடும் என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் பேசுகையில், இந்த சேவை இணையத்தை இன்னும் பல லட்சம் இந்தியர்களிடையே கொண்டு செல்லும் என்றார். இணையம் வழி ஒவ்வொரு இந்தியரும் இணைவதற்கு நல்லதொரு கருவியாக இந்த சேவை இருக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என்றார்.


2 comments :

”தளிர் சுரேஷ்” at February 20, 2015 at 3:04 PM said...

பயனுள்ள தகவல்கள்! நன்றி!

Anonymous said...

மிகவும் உதவியான தகவல் சகோ..~~

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes