விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது.
ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தான் வழங்கும் கூகுள் Hangouts மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளுமாறு, தன் வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 முதல் ”ஜி டாக்” வசதியை கூகுள் நிறுத்தி உள்ளது.
(இனி, தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் (எ.கா. http://goo.gl/FSbCX5) இதனைத் தொடந்து மேற்கொள்ளலாம் என்றாலும், அவை கூகுள் அங்கீகாரம் பெற்றவை இல்லை என்பதால், ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்று கூகுள் எச்சரித்துள்ளது.
இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். உலகில் மிகப் பெரிய அளவில், மொபைல் சாதனங்களில் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தால், அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டத்தினைத் தர இயலவில்லை.
முதலில் வாட்ஸ் அப் மெசேஜிங் திட்டத்தினை கூகுள் வாங்கிட முயற்சி செய்தது. 1000 கோடி டாலர் வரை தர முன் வந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், மிகச் சாதுர்யமாக, அதனை 1,900 கோடி டாலருக்குத் தட்டிச் சென்றது.
எனவே, கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் ப்ளஸ் சார்ந்த தன்னுடைய “ஹேங் அவுட்ஸ்” புரோகிராமினை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஹேங் அவுட், மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கான வசதி கொண்டதாக இயங்குகிறது. இதில் பல கூடுதல் வசதிகள் இருந்தாலும், தினந்தோறும் கூகுள் தரும் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட, கூகுள் ஹேங் அவுட் தரும் வசதிகளைப் பயன்படுத்தத் தயாராய் இல்லை.
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்ற ஜனவரி 2015ல், வாட்ஸ் அப் 70 கோடி வாடிக்கையாளர்களையும், வி சேட் (WeChat) 50 கோடி பேரையும் கொண்டுள்ளது. தற்போதுதான் இந்த பிரிவில் வந்திருக்கும் ஹைக் (Hike) 3.5 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
ஆனால், கூகுள் தரும் ஹேங் அவுட் வசதியை மிகக் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர். எத்தனை பேர் மாதந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை.
கூகுள் போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மெசேஜிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, அதற்கு ஜி டாக் தேர்ந்தெடுத்தது.
ஆனால், இப்போது திடீரென, அதனையும் விட்டுவிட்டு, ஹேங் அவுட் வசதியைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.
0 comments :
Post a Comment