இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும், இணைய வர்த்தகத்துறையில், வரும் 6 மாதங்களில், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என இந்த தொழில் பிரிவில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இணைய வர்த்தகத்தின் இன்றைய மதிப்பு ரூ. 73,759 கோடி (1,200 கோடி டாலர்). வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பல்வேறு இந்திய நிறுவனங்களைப் பல நிறுவனங்கள் தங்களுக்கு இணைய வர்த்தகத்தை நிர்வகித்திட ஆட்கள் தேவை எனக் கேட்டுள்ளனர். ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டில், இந்திய இணைய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ரூ.23,757 கோடியாக இருந்தது. 2013 ஆம் ஆண்டில் இது ரூ.77,447 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் இந்தப் பிரிவில் வளர்ச்சி 8முதல் 10 சதவீதமாக இருந்த போது, இந்தியாவில் 30% ஆக வளர்ச்சி பெற்றது.
இந்த வர்த்தகப் பிரிவினைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவால், அதில் ஈடுபடும் உயர்நிலை அலுவலர்களை நிறுவனங்களில் தக்க வைப்பதுதான். என்ன ஊதியம் கொடுத்தாலும், இந்த பிரிவில் ஈடுபடுபவர்கள், பணம் தவிர மற்றவற்றை எதிர்பார்க்கின்றனர் என, பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தினர் கூறுகின்றனர். மற்ற வர்த்தகப் பிரிவுகளைப் போல் அல்லாமல், இதில் பணியாற்றுவதற்கு தனிப் பண்பும், திறமையும் தேவையாய் உள்ளது.
தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இணைய வழி வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி, வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, இதில் ஈடுபடும் நிறுவனங்கள் எப்படியாவது தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பிரிவின் வாடிக்கையாளர்கள், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும் முன், அதற்கெனத் தனியே ஏதேனும் அப்ளிகேஷன்கள் உள்ளனவா என்று ஆர்வத்துடன் தேடுகின்றனர்.
வாடகைக் கார் ஓட்டுநர்கள் கூட, தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கின்றனர். இதனால் தான், மும்பையில் இயங்கும் வாடகைக் கார் இணைய நிறுவனமான Bookmycab.com நிறுவனத்திற்கு, பங்கு முதலீடு அதிகமாகக் கிடைத்துள்ளது.
இந்த அசுர வளர்ச்சிக்கு, இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் முனைப்பான டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஒரு காரணமாகும். திடீரென 25 கோடியாக உயர்ந்த இணைய வர்த்தக வாடிக்கையாளர் எண்ணிக்கை, இப்பிரிவின் வளர்ச்சியை அடையாளம் காட்டியுள்ளது.
தொலை தொடர்பு கட்டமைப்பு, புதுமையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஆன்லைனில் எளிதாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவை, இணைய வர்த்தகத்தில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன.
இணைய வர்த்தகப் பிரிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடைகள் பிரிவுகளில் தான், மிக அதிகமாக வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில், திடீரென 80% வளர்ச்சியை மேற்கொண்ட இந்தப் பிரிவில் வரும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
0 comments :
Post a Comment