ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும்.
இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலும், நாம் சில ஷார்ட்கட் கீ தொகுப்புகளை மட்டுமே நினைவில் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். சிலவற்றை, அவை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், மறந்து பயன்படுத்தாமல் இருந்து விடுகிறோம்.
இதற்குக் காரணம், அவை அடிக்கடி பயன்படுத்தப்படாதவையாக இருப்பவை; அல்லது, கீ போர்டில், குறிப்பிட்ட கீகள் சற்று தொலைவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலை. அந்த வகையில் விண்டோஸ் சிஸ்டத்தில், மறக்கப்பட்ட சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் காணலாம்.
1. கண்ட்ரோல் + ஒய் (Ctrl + Y):
நம்மில் பலர், “Ctrl + Z” கீகளைப் பயன்படுத்தினால், அப்போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு நீக்கப்படும் என அறிந்திருக்கிறோம். இது பல வேளைகளில் நமக்கு உதவியாக இருக்கிறது.
ஆனால், இதே போல “Ctrl + Y” என்ற கீ தொகுப்பும் உள்ளது என்று ஒரு சிலருக்கே தெரியும். அவர்களும் இதனைப் பயன்படுத்துவது இல்லை. இந்த கீ தொகுப்பு, நாம் மேலே சொன்னபடி, நீக்கப்பட்ட செயல்பாட்டினை, மீண்டும் கொண்டு வரும்.
இதனால், நாம் தவறுதலாக, முன்பாக மேற்கொண்ட செயலை நீக்கிவிட்டால், அதனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இந்த கீ தொகுப்பு பயன்படுகிறது. இது பல வேளைகளில், நம் வேலைக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும். எனவே, இதனை மறந்திடாமல், மனதில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்த வேண்டும்.
2. விண்டோஸ் + பிரேக்/ பாஸ் (Win + :
உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் கட்டமைப்பு தகவல்கள் குறித்து அறிய, நாம் கண்ட்ரோல் பேனலில் இருந்து நேரடியாகப் பெறுகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது.
“Win + X” என்ற கீகளை அழுத்தி, கிடைக்கும் பட்டியலில், “System” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். ஆனால், இதனை இன்னும் எளிமைப் படுத்த, உங்கள் கீ போர்டில், “Win + Pause/Break” அழுத்துங்கள். சிஸ்டம் குறித்த தகவல்கள், பாப் அப் விண்டோவாக எழுந்து வரும்.
3. ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் (Alt + Print Screen):
நம் கீ போர்டில் உள்ள (Prt Scr) கீ, அடிக்கடி, ஸ்கிரீனில் தெரியும் தோற்றத்தினை அப்படியே படமாக மாற்றி எடுக்கப் பயன்படுகிறது. திரைக் காட்சி முழுமையும் இந்த செயல்பாட்டில் காட்டப்படும்.
இதற்குப் பதிலாக, செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ காட்சி மட்டும் தேவை என்றால், “Alt + Print Screen” கீகளை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் காட்சி, நாம் விரும்பும் செயல்பாட்டை மட்டும் காட்டும் விண்டோ காட்சியாக இருக்கும். இதனால், திரை முழுமையும் காப்பி செய்து, பின்னால், அதனை எடிட் செய்திடும் வேலை மிச்சமாகிறது.
4. விண்டோஸ் + இ (Win + E)
விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படும் ஒரு புரோகிராம் உள்ளது என்றால், அது விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான். பொதுவாக, இதனை ஸ்டார்ட் மெனு இயக்கிப் பெறுகிறோம்.
அல்லது டாஸ்க் பாரில் உள்ள இதன் ஐகானில் கிளிக் செய்கிறோம். அல்லது, திரையில் காட்டப்படும் “My Computer” ஐகான் மீது கிளிக் செய்து பெறுகிறோம். ஆனால், மிக வேகமாக, விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பெற வேண்டும் என்றால், உங்கள் கீ போர்டில், “Win + E” அழுத்துங்கள்.
இதனைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே இல்லை. ஆனாலும், இது மிக மிகப் பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
5. கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl + Shift + N):
புதிய போல்டர் ஒன்றை உருவாக்க, நாம் அனைவரும் பின்பற்றும் வழி, டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, பின்னர் “New > Folder.” எனத் தேர்ந்தெடுப்பதுதான்.
இதைக் காட்டிலும் எளிய வழி, “Ctrl + Shift +N,” ஆகிய கீகளை அழுத்துவதாகும். இந்த கீகளை அழுத்தினால், உங்களின் புதிய போல்டர் உருவாக்கப்பட்டு, நீங்கள் அதற்கு ஒரு பெயர் கொடுப்பதற்காகக் காத்திருக்கும்.
கைகளை எடுத்து, மவுஸை இயக்கி, கிடைக்கும் மெனுவில், இதற்கான பிரிவுகளை இயக்கி, போல்டரைப் பெறுவதைக் காட்டிலும், இது எவ்வளவு எளிய, குறைந்த நேரம் எடுக்கும் வழி என தெரிந்து கொள்ளலாம்.
0 comments :
Post a Comment