மொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., (SOR) சாப்ட்வேர்

தூத்துக்குடி: இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டினால் மீனவர்கள் மொபைல் போனில் எச்சரிக்கை செய்யும் புதிய சாப்ட்வேரை, தூத்துக்குடி இன்ஜினியர் ரெசிங்டன் அறிமுகம் செய்தார். 

எல்லை தாண்டி மீன் பிடித்து பிற நாட்டு படையினரால் கைது செய்யப்படும் அவலத்தை தவிர்க்க முடியும். புதிய சாப்ட்வேர் அறிமுகம்:இந்திய- இலங்கை மீனவர்கள் தங்களது கடல் எல்லைகளை தாண்டி மீன் பிடிப்பதால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எல்லைக்கோடு குறித்து தெரிவதில்லை. இதன் காரணமாக எல்லை மீறுவது நடந்து வருகிறது. 

இதனை தவிர்க்கும் பொருட்டு மீனவர்கள் தங்களது கடல் எல்லையை தாண்டும் போது, அவர்களது மொபைல் போனில் எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் டவுன் லோடு செய்திருந்தால், அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த இன்ஜினியர் ரெசிங்டன் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று அறிமுகம் செய்தார். 


ரெசிங்டன் தெரிவித்ததாவது: 

தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். 

இதற்கான தீர்வு வேண்டும், என இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன். 


இந்திய- இலங்கை கடல் எல்லை:

இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா,பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். 

எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது.1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. இது கடலில் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.


டவுன்லோடு செய்யலாம்: 

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த எஸ்.ஓ.ஆர்., சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி கடலில் மீன் பிடிக்கலாம். 


எச்சரிக்கை செய்யும்: 

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்னரை கி.மீ., தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை படகு அடையும் போது, மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். 

அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன், ஒலியினை எழுப்பும். 

இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes