தங்களுடைய மொபைல் போன்களை, குறிப்பாகப் பெரிய அளவில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் போன்களைத் தண்ணீரில் தவற விடுபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.
நீச்சல் குளங்களில் இறங்குகையில், தங்கள் கால்சட்டை அல்லது சட்டைப் பாக்கெட்டில் வைத்தவாறே இறங்குதல், குளியலறையில் நீர் நிரம்பிய வாளிக்குள் தவறவிடுதல், டாய்லட் தொட்டியில் விழவிடுதல், மழை நீர் தேங்கி இருக்கும் சாலைகளில் தவற விடுதல் என இது பல வகைகளில் உள்ளது.
சிலர், இவ்வாறு தவறவிட்டு உடனே எடுக்கப்படும் போன்களை, அரிசியில் 72 மணி நேரம் புதைத்து வைத்து எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு சரி என்று இதுவரை யாரும் தங்கள் அனுபவத்தினைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், அதிக நேரம் நீரில் மூழ்கிவிட்டால், ஸ்மார்ட் போன் விலை உயர்ந்த டேபிள் வெய்ட்டாகத்தான் பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன், மொபைல் போன்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கையில், தண்ணீரினால், கெட்டுப் போகாத அல்லது தண்ணீரில் மூழ்கினாலும், செயல்படுகின்ற வாட்டர் புரூப் மொபைல் போன்கள் ஏன் வருவதில்லை.
ஒன்றிரண்டு அது போல வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சோனி எக்ஸ்பீரியா இஸட் 3 மாடலைச் சொல்லலாம். இதற்கான விளம்பரத்தில் கூறியுள்ளபடி, இதனைக் கைகளில் வைத்துக் கொண்டு அடை மழை பெய்திடும் நாளில் ஓடலாம். குளத்தங்கரையில், கைகளில் வைத்தபடியே குதித்து நீரில் மூழ்கலாம்.
1.5 மீட்டர் ஆழத்தில் இதனை 30 நிமிடங்கள் மூழ்க வைத்து இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற சில மாடல்களும் இது போல தண்ணீரில் நனைந்தாலும் கெட்டுப் போகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டன.
ஆனால், மக்கள் அந்த பண்பிற்காகவே அவற்றை வாங்கியதாக இதுவரை நமக்குத் தகவல் இல்லை. எனவே தான் பல நிறுவனங்கள், நீரில் நனைந்தாலும் இயங்கும் மொபைல் போன்களை வடிவமைத்து வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
0 comments :
Post a Comment