ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி எல்.டி.இ. சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதனை மனதில் கொண்டு, அதற்குப் போட்டியாக தன் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
4ஜி சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அதன் 3ஜி சேவையைக் காட்டிலும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.
தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையைப் பயன்படுத்துபவர்கள், அந்த மொபைல் போன் 4ஜி சேவையைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால், 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி சேவையினைப் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன்களின் விலை மிக அதிகமாக உள்ளது. அனைவரும் எளிதாக வாங்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் இல்லை.
பார்தி ஏர்டெல், தன் 4ஜி சேவைக்கு, 10 ஜி.பி. டேட்டா அளவிற்கு ரூ.999 கட்டணம் என அறிவித்துள்ளது. அதன் 3ஜி சேவையில், இந்த அளவு டேட்டாவிற்கு ரூ.1,499 வசூலிக்கப்படுகிறது.
5 ஜி.பி. டேட்டாவிற்கு, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளில், ரூ. 850 என ஒரே கட்டணம் தான். 3ஜி பயன்படுத்துபவர்களுக்கு, 4 ஜி.பி. டேட்டாவிற்கு ரூ.749ம், 4ஜி சேவையினைப் பயன்படுத்துபவர்களுக்கு அதே அளவிலான டேட்டாவிற்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. இதே போல் 1 ஜி.பி. டேட்டாவிற்கு, முறையே ரூ.249 மற்றும் ரூ. 250 வசூலிக்கப்படுகிறது.
ஏர்டெல் வழங்கும் 4ஜி மொபைல் டேட்டா சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதலில் கொல்கத்தாவில் இது தொடங்கப்பட்டது. பெங்களூருவில் தரப்படும் இந்த சேவை, இன்னும் சென்னைக்கு வரவில்லை. விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடக்கத்தினை எதிர்பார்த்துள்ளனர். அதன் சேவை தொடங்கிய பின்னர், அனைத்து நிறுவனங்களும், தங்கள் கட்டணத்தைப் பெரும் அளவில் மாற்றி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது 20% வரை குறைக்கப்படலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் மட்டுமே, இந்தியா முழுமையும் 4ஜி அலைவரிசை சேவை வழங்கும் உரிமத்தினைப் பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment