இணையம் கற்றுத் தரும் ஏர்டெல்

தகவல் தொழில் நுட்பப் பிரிவில், பெரிய அளவில் செயல்படும், ஏர்டெல் நிறுவனம், இணையம் குறித்து இதுவரை தெரியாத, பயன்படுத்தாத, தன் வாடிக்கையாளர்களுக்கு, இணையம் குறித்துக் கற்றுத் தரும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. 

ஏர்டெல் அலுவலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தியாவெங்கும் உள்ளனர். 14 லட்சம் சில்லரை விற்பனையாளர்கள், 20 ஆயிரம் கள அலுவலர்கள் மற்றும் 15,000 அலுவலர்கள் என ஏர்டெல் ஊழியர் கட்டமைப்பு விரிவாக உள்ளது. 

ஏறத்தாழ 1,800 நகரங்களில் இவர்கள் இயங்குகின்றனர். இவர்கள் அனைவரும், முதன் முதலாக இணையம் பயன்படுத்துவோருக்கு, இணையத்தை இயக்கும் வழிகள் குறித்து கற்றுத் தருகிறார்கள்.

இணையத்தைப் பயன்படுத்துவதில், மூன்று வகையான தடைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, ஸ்மார்ட் போன்களில் இணையத்தைத் தொடர்பு கொள்ள அஞ்சுதல், அதற்கான தேவைகள் அதிகம் என்ற தேவையற்ற பயம் மற்றும் மெகா பைட், கிகா பைட் போன்றவை எத்தகைய அளவு என அறியாதிருத்தல். 

இதில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட அலகுகள் குறித்த பயம் முக்கியமானது. ஏனென்றால், இதுவே இணையம் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதால், இவை என்ன அளவு, எதனைக் குறிக்கிறது என்பதனை மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 

இந்தியாவின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையத்தை 25% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்காவில் 85% ஆகவும், சீனாவில் 46% ஆகவும் உள்ளது.

இருப்பினும் இணைய சந்தாதாரர் எண்ணிக்கை, உலக அளவில் மூன்றாவதாக, 25 கோடி என்ற அளவில் உள்ளது. 

இந்த திட்டம் மூலம் இணையம் பயன்படுத்துவோர் அது குறித்த கல்வி மற்றும் செயல்முறை அறிவினைப் பெறுவதோடு, தற்போது பிரதமர் மோடி அறிவித்த ”டிஜிட்டல் இந்தியா” திட்டத்திற்கும் உதவியாக இருக்கும். 

ரூ.1.13 லட்சம் கோடி பணம் திட்டச் செலவாக அறிவிக்கப்பட்டு டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ள, மக்கள் இணையச் செயல்பாட்டு அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பாகும். 

இந்தியாவில் 11.5 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டில், இன்னும் 10 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் (One Touch Internet) இந்நிறுவனத்தின் செயல் அலுவலர்கள், மக்களிடம் சென்று, எப்படி ஸ்மார்ட் போனை ஒரு முறை தொடுதல் மூலம், உடனடியாக இணையத் தொடர்பினை மேற்கொள்ளலாம் என்றும், மேலும் இதனை எப்படி அன்றாட நம் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் கற்றுக் கொடுப்பார்கள். 

இவர்கள் சந்திக்கும், இதுவரை இணையம் பயன்படுத்தாத மக்களிடம், ஸ்மார்ட் போன் இல்லை என்றாலும், தாங்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் போனில் இதனைக் கற்றுக் கொடுப்பார்கள்.

இவர்களுக்கு, இணைய இணைப்பு, செயலாக்கம், சமூக வலைத் தளங்களில் தகவல் பரிமாற்றம், ஆடியோ மற்றும் வீடியோ காணுதல், கோப்புகள் தரவிறக்கம், இணைய தளங்களின் மூலம் பொருட்கள் வாங்குதல், பயணங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை வீடியோ மூலமும், நேரில் செயல்முறைப் பயிற்சியின் மூலமும் கற்றுக் கொடுப்பார்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes